நிலநடுக்கம் ஏற்பட்ட அந்த நிமிடம்..! - மெய்சிலிர்க்க வைக்கும் தொழுகை வீடியோ #Indonesia

இந்தோனேசியா நிலநடுக்கத்தின்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

தொழுகை
 

இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், 145 பேரின் உயிரைப் பறித்துச் சென்றது. 

இந்தோனேசியாவின் பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமான லாம்போக் தீவில் ஒவ்வொரு வார இறுதியிலும் கூட்டம் அலைமோதும். கடந்த ஞாயிற்றுக்கிழமையும் அப்படிதான். சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர்வாசிகளும் வார இறுதியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அன்று இரவு அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் லாம்போக் தீவு ஆட்டம் கண்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வருவதற்குள் இடிந்துவிழத் தொடங்கின.  நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8, 7 ஆகப் பதிவாகின. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. தீவில் இருந்த 80% வீடுகள் நாசமாகின. லாம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் பாலி தீவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஞாயிறு இரவு, பாலி தீவில் டென்பாஸர் என்ற இடத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடந்துகொண்டிருந்தது. இமாம் என்று அழைக்கப்படும் இஸ்லாமியக் குரு, தொழுகையை முன் நின்று நடத்திக்கொண்டிருந்தார். திடீரென பலத்த சத்தத்துடன் கட்டடம் ஆடத் தொடங்கியது. தொழுகையில் இருந்தவர்கள் தங்கள் தொழுகையை நிறுத்தவில்லை. கண்களைத் திறக்கக்கூட இல்லை. கட்டடம் குலுங்கியதில் ஒரு சிலர் நிற்க முடியாமல் தடுமாறினர். ஆனாலும், இமாம் தொழுகையை நிறுத்தவில்லை. தன் கைகளை சுவரில் ஊன்றியபடி தொழுகையைத் தொடர்ந்தார்.

இமாம் தொழுகை செய்வதை ஏதேச்சையாக தனது செல்போனில் பதிவு செய்துகொண்டிருந்த ஒருவர் நிலநடுக்கம் ஏற்பட்டபோது இமாம் கண்கள் திறக்காததைப் பார்த்து தானும் அங்கேயே நின்று வீடியோ எடுத்தார். அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பதிவு செய்த அந்த நபர்,  `இந்தக் காட்சியைப் பார்த்த எனக்கு அழுகை வந்துவிட்டது. பூகம்பத்தின்போது தொழுகை விட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டாலும் கூட, இமாம் தன் கண்களைக்கூட திறக்கவில்லை. சிறிது நேரத்தில் நிலநடுக்கம் நின்றுவிட்டது’ என்று நெகிழ்ந்துள்ளார். அந்த வீடியோ காட்சி பகிரப்பட்ட சில நிமிடங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். வீடியோவில் இருக்கும் இமாமின் மன உறுதிக்கு ஹேட்ஸ் ஆஃப்! 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!