அழுகையை நிறுத்தாத குழந்தை... இந்தியத் தம்பதியரை இறக்கிவிட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் | an Indan family was reportedly offloaded from the flight because their three year old wouldn't stop crying

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (09/08/2018)

கடைசி தொடர்பு:17:40 (09/08/2018)

அழுகையை நிறுத்தாத குழந்தை... இந்தியத் தம்பதியரை இறக்கிவிட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த இந்தியத் தம்பதியர், விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்ட விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

பிரிட்டிஸ் ஏர்வேஸ்

லண்டனில் இருந்து பெர்னில் நகருக்கு கடந்த ஜூலை 23-ம் தேதியில், பிரிட்டிஷ் ஏர்வேஸின் BA 8495 விமானம் புறப்பட்டது. இதில், இந்திய போக்குவரத்துத் துறை அமைச்சகத்தில் பணிபுரியும் அதிகாரியின் குடும்பத்தினர் பயணித்துள்ளனர். விமானம் புறப்பட தயாராக இருந்த நேரத்தில், தம்பதியரின் மூன்று வயதுக் குழந்தை சௌகரியமாக அமர முடியாமல் அழத்தொடங்கியது. குழந்தையின் அழுகையை நிறுத்த பெற்றோர் கடுமையாகப் போராடியிருக்கின்றனர். இருப்பினும், குழந்தை அழுகையை நிறுத்தாமல், மேலும் கதறி அழத் தொடங்கியது. அப்போது, தம்பதியரின் இருக்கைக்கு வந்த விமான ஊழியர் ஒருவர், குழந்தையின் அழுகையை நிறுத்தும்படிக் கூறியுள்ளார். 

இந்நிலையில், அந்தத் தம்பதியருக்குப் பின்இருக்கையில் அமர்த்திருந்த மற்றொரு இந்தியக் குடும்பத்தினர், குழந்தையின் அழுகையைச் சமாளிக்க பிஸ்கட் ஒன்றைக் கொடுத்துள்ளனர். அப்போதும், குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. இதனால், குழந்தையின் அழுகையை நிறுத்தும்படி மீண்டும் விமான ஊழியர் தம்பதியரிடம் கடுகடுத்துள்ளார். இதனிடையே, விமானம் புறப்படத் தயாராக இருந்தது. குழந்தை அழுதுகொண்டே இருந்ததால், விமானத்திலிருந்து அவர்கள் இறக்கிவிடப்பட்டனர். அவர்களுடன், குழந்தையின் அழுகையை நிறுத்த பிஸ்கட் வழங்கிய இந்தியத் தம்பதியரையும் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிட்டுள்ளனர். மேலும், மாற்று விமானத்தில் வரும்படியும் அவர்களை அறிவுறுத்தியிருக்கின்றனர். இந்த விவகாரம் தற்போது, சர்ச்சையாக வெடித்துள்ளது. அனைத்து இந்தியர்களையும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் புறக்கணிப்பதாகப் புகார்களும் எழுந்துள்ளன. 

`பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்கள், தங்களிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்டதாகவும், இனவெறியில் ஈடுபட்டதாகவும்' விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்ட குடும்பத்தினர், இந்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, `உரிய விசாரணை நடத்தப்படும்' என்று பிரிட்டிஷ் ஏர்வேஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 


[X] Close

[X] Close