சீனப் பெருஞ்சுவர் எங்கே உள்ளது? - மில்லியனர் நிகழ்ச்சியில் திருதிருவென முழித்த துருக்கியப் பெண் 

துருக்கி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்,  `சீனப் பெருஞ்சுவர் எங்கு உள்ளது?’ என்ற எளிமையான கேள்விக்கு விடை தெரியாமல் முழித்த போட்டியாளரை நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துவருகின்றனர். 

துருக்கி பெண்
 

இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான  `குரோர்பதி’ போன்று,  துருக்கி நாட்டில்  `உங்களில் யார் மில்லியனர்?’ (Who wants to be a millionaire) என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண் போட்டியாளர் ஒருவரால், அந்நிகழ்ச்சி தற்போது உலக அளவில் பிரபலம் ஆகிவிட்டது.

சமீபத்தில் ஒளிபரப்பான  `உங்களில் யார் மில்லியனர்?’ நிகழ்ச்சியில், துருக்கியின் இஸ்தான்புல் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கலந்து கொண்டார். பொருளாதார மாணவியான அவரிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்,  `சீனப் பெருஞ்சுவர் எங்கே உள்ளது?’  என்ற கேள்வியைக் கேட்டார். அந்தக் கேள்விக்கு, `சீனா, இந்தியா, தென்கொரியா மற்றும் ஜப்பான்’என நான்கு ஆப்ஷன்கள் தரப்பட்டன. சற்று நேரம் யோசித்த அவர், இந்தக் கேள்விக்கு நான் பார்வையாளர்களிடம் கருத்து கேட்கும் லைஃப்லைனை( audience poll) பயன்படுத்துகிறேன் என்று கூறினார்.

பார்வையாளர்களில் 51 சதவிகிதம் பேர், ''சீனா'' என்று பதில் அளித்தனர். மீதம் உள்ள 49 சதவிகிதம் பேர், வெவ்வேறு விடைகளைத் தேர்வு செய்தனர். இதனால் குழம்பிப்போன அந்தப் பெண், நண்பர்களுக்கு போன் செய்து கருத்துக் கேட்கும் லைஃப்லனைப் பயன்படுத்த விரும்புகிறேன் என்றார்.  அவரின் நண்பர், அவருக்கு ''சீனா'' என்று உறுதியாகப் பதில் அளித்தார். இரண்டு லைஃப் லைனைப் பயன்படுத்திய பின்னர், அவர் சீனா என்னும் சரியான விடையைப் பதிவுசெய்தார். அடுத்த கேள்விக்கு தவறான விடை கொடுத்து, போட்டியைவிட்டு வெளியேற்றப்பட்டார். யூ டியூபில் இந்த நிகழ்ச்சியின் வீடியோ வெளியானது. சீனப் பெருஞ்சுவர் எங்கு உள்ளது என்ற கேள்விக்கு விடை தெரியாமல், பொது அறிவு நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண்ணை நெட்டிசன்ஸ் கடுமையாக ட்ரோல் செய்துவருகின்றனர்.

துருக்கியில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது. இதுகுறித்து அந்தப் பெண்ணிடம் துருக்கி ஊடகங்கள் கேள்வி எழுப்பின. `உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் சீனப் பெருஞ்சுவர் பற்றி உங்களுக்குத் தெரியவில்லையே?’ என்றும் உங்களைப் பற்றி விமர்சனங்கள் வருகின்றதே? என்றும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ‘அந்த நிகழ்ச்சியில் லைஃப்லைன் பயன்படுத்துவது என் விருப்பம். அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை’ என்று கூறியிருக்கிறார். 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!