ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல் - 29 சிறுவர்கள் பலி? | Saudi-led Coalition Strikes School Bus Killing At Least 29 Children

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (10/08/2018)

கடைசி தொடர்பு:08:40 (10/08/2018)

ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல் - 29 சிறுவர்கள் பலி?

ஏமனில் கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் அரசுக்கூட்டுப்படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 29 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஏமன்

ஏமனில், அதிபர் ஆதரவுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. கடந்த 2015 முதல் சண்டை நீடித்து வருகிறது. இதில் ஏமன் தலைநகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும், அதிபருக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் வான்வழித்தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆத்திரமடைந்த கிளர்ச்சியாளர்கள் சவுதியை குறிவைத்து நேற்று முன்தினம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதை சவுதிப்படை முறியடித்து அழித்தது.

இந்நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதியானா சாடா மாகாணத்தின் மார்க்கெட் பகுதியில் அரசுப்படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்சென்ற வாகனம் பலத்த சேதமடைந்தது. பேருந்தில் இருந்த குழந்தைகளில் 29 பேர் உயிரிழந்ததாக ஏமனில் உள்ள செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. சிறுவர்கள் களப்பணியை முடித்துவிட்டு தங்களது வீட்டுக்குப் பள்ளி வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தனர். மார்க்கெட் பகுதியில் பொருள்கள் வாங்குவதற்காக வாகனத்தை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். குழந்தைகள் பேருந்துக்குள் இருந்தனர். இந்தச் சமயத்தில்தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலில் 51 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாகனத்தில் கிடத்தப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தைக் கண்ட தந்தை ஒருவர் கதறி அழும் காட்சி காண்போரைக் கண்கலங்கச் செய்கிறது.