`அவரின் மனம்தான் முக்கியம்; இளவரசி அந்தஸ்து முக்கியமல்ல' - காதலுக்காகப் பட்டத்தைத் துறந்த காதலி

ஜப்பான் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மாகோ சாதாரண குடிமகன் ஒருவரைத் திருமணம் செய்ய உள்ளார். ஆனால், நிதிச்சூழல் காரணமாக அவர்கள் திருமணம் தள்ளிவைக்க வாய்ப்புள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கீ கொமுரோ - இளவரசி மாகோ

ஜப்பான் மன்னர் அகி ஹிட்டோவின் மூத்த பேத்தியும் இளவரசர் புமிஹிதாவின் மகளுமான இளவரசி மாகோ. 26 வயதாகும் இவர் தற்போது சாதாரண குடிமகன் ஒருவரைத் திருமணம் செய்ய உள்ளார். இதற்காக அவர் அரச குடும்ப வாரிசு பட்டத்தைத் தியாகம் செய்ய உள்ளார். மாகோ கடந்த 2012-ம் ஆண்டு,டோக்கியோ இன்டர்நேஷனல் கிறிஸ்டியன் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது தன்னுடன் பயின்ற கீ கொமுரோ என்பவருடன் காதல் வசப்பட்டார். மாகோ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், கொமுரோவோ சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும், அவர் தற்போது சட்ட அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர்களின் திருமணத்தில் சிக்கல் உருவாகலாம் எனப் பேசப்பட்ட நிலையில், இருவரின் குடும்பத்தினரும் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டின. இதையடுத்து இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. மேலும், திருமணத்தை அக்டோபர் மாதம் நடத்த முடிவு செய்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் வெளியில் தெரியவந்தது முதல் வைரலானது. காரணம் ஜப்பான் அரசு குடும்ப சட்டப்படி, அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாதாரண குடிமகனை கரம் பிடிக்க வேண்டும் என்றால், அவர் அரச குடும்ப பதவிகளைவிட்டு விலக வேண்டும் என்பதுதான். இந்தச் சட்டம் அரச குடும்ப பெண்களுக்கு மட்டும்தான். 

அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது. தற்போது மாகோ இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு காதலுக்காகத் தன் இளவரசி பதவியைத் துறக்க உள்ளார். மேலும், தனது வீட்டைவிட்டு வெளியேறவும் தீர்மானித்துள்ளார். இதுகுறித்து கூறிய இளவரசி மாகோ, ``எனது சிறுவயதிலே இந்தச் சட்டங்கள் குறித்துத் தெரியும். ஆனால், எங்கள் இருவரது மனம் ஒத்துப்போய் உள்ளதைவிட இளவரசி அந்தஸ்து எனக்குப் பெரிது கிடையாது. அதனால்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்" எனக் கூறியுள்ளார். காதலுக்காகத் தனது இளவரசி பட்டத்தைத் துறக்க முடிவு எடுத்துள்ள மாகோவுக்கு ஜப்பான் மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்து, இதை வைரலாகப் பரப்பி வருகின்றனர். இதற்கிடையே, வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிதிச் சூழல் காரணமாகத் திருமணத்தைத் தள்ளிப்போட அவர்கள் முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 2020-ம் ஆண்டுக்குத் திருமணத்தைத் தள்ளிவைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!