`55 பூனைகளை அன்போடு பார்த்துக்கணும்; கை நிறையச் சம்பளம்!' - வைரலாகும் விளம்பரம்

பூனை

பூனைப் பிரியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... இயற்கை எழில் கொஞ்சும் கிரேக்கத் தீவில் உங்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு. 55 பூனைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்குச் சம்பளம், தங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் தனி வீடு, உணவு என அனைத்தும் வழங்கப்படும். நம்ப முடியவில்லையா? 

பூனை
 

கிரீஸ் நாட்டில் மலை, நதி, காடு என இயற்கை சூழலில் சிரோஸ் என்னும் தீவு அமைந்துள்ளது. ஜோஹன் என்னும் பெண் சிரோஸில் தன் கணவருடன் 2010-ம் ஆண்டு குடியேறினார். அவர்கள் மன அமைதிக்காக அந்த இடத்துக்கு வந்தனர்.  ஜோஹன் சுற்றுவட்டாரப்பகுதியில் ஆதரவில்லாமல் சுற்றித்திரிந்த பூனைகளை வீட்டுக்கு அழைத்து வந்து கவனித்துக்கொள்ளத் தொடங்கினார். அந்த வேலை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜோஹனின் வீடு, பூனைகளின் சரணாலயமாகவே மாறியது. ஆனால், தற்போது அவர் சிகிச்சைக்காக வேறு இடத்துக்குக் குடியேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால் தன் பூனைகளைப்  பிரியமுடன் பார்த்துக்கொள்ள ஓர் ஆள் தேவை என்று ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்துள்ளார். அவரின் அந்த ஃபேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலாகிவிட்டது.

வீட்டின் முன்புறம்

வீட்டின் முன்புறம்..

ஜோஹான் பகிர்ந்திருந்த புகைப்படங்கள்  ஒவ்வொன்றும் கொள்ளை அழகு. முக்கியமாக அந்த வீடு அமைந்துள்ள இடம் அழகோ அழகு. 
ஜோஹான் பகிர்ந்த விளம்பரத்தின் தமிழாக்கம் பின்வருமாறு...

 `இது ஜோக் கிடையாது. உண்மையான அறிவிப்பு. பூனைகளை அன்புடன் பார்த்துக்கொள்ளும் பக்குவம் உடையவருக்கு கை நிறையச் சம்பளத்துடன் வேலை காத்திருக்கிறது. இயற்கை சூழலில் அமைந்துள்ள எங்கள் பூனைகள் சரணாலயத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும். 55 பூனைகள் உள்ளன.

வீடு
 

ஏகன் கடலுக்கு அருகில் உள்ள அனைத்து வசதிகளுடன் அமைந்துள்ள வீட்டில் இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம். தண்ணீர், மின்சாரம் அனைத்துமே இலவசம்தான். நீங்கள் என் பூனைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டால் மட்டும் போதும். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த வேலை மிகவும் பொருத்தமாக இருக்கும்.

பூனை
 

இயற்கை சூழலில் பூனைகளின் அன்போடு நிம்மதியான வாழ்க்கை இங்கு நிச்சயம். உங்களுக்குப் பூனைகளின் மனநிலை பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஏன் என்றால் இங்கு இருப்பவை வீட்டுப் பூனைகள் இல்லை. காடுகளில் உலவும் பூனைகள். அவற்றை அன்போடு கவனித்துக்கொள்ள வேண்டும்’ என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளனர். சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் பற்றி குறிப்பிடவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!