பிரான்ஸ் அரசு தந்த செம டிரெய்னிங்... குப்பைகள் சேகரிக்கும் `காக்கா’!

மேற்கு பிரான்ஸின் வெண்டீ பகுதியில் (Vendee region) அமைந்துள்ள புய் டூ ஃபோ(Puy du Fou) எனும் பிரபலமான வரலாற்று தீம் பார்க்தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

பிரான்ஸ் அரசு தந்த செம டிரெய்னிங்... குப்பைகள் சேகரிக்கும் `காக்கா’!

ஒரு தண்ணீர்க் குடுவையின் அடியில் இருந்த கொஞ்ச நீரைக் கற்களால் மேலே கொண்டு வந்து தனது தாகத்தைத் தீர்த்த ஒரு காகத்தின் கதையை அனைவரும் கேட்டிருப்போம். ஆனால், உண்மையில் காகங்கள் அவ்வளவு புத்திக் கூர்மையுடையவைதானா. நம் அன்றாட வாழ்க்கையில் காகம் என்பது கெட்ட விஷயங்களின் அறிகுறியாகத்தான் பார்க்கப்படுகிறது. நம் வீட்டின் மேல் 20 காகங்களுக்கு மேல் ஒன்று சேர்ந்து கரைந்தால் ஏதோ நடக்கப்போகிறது என்ற உள்ளுணர்வு வழி வழியாக நமக்குக் கடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அவை கரைவதற்கான சூழலியல் காரணங்கள் வேறாகவும் இருக்கலாம். நாம் கதையில் மட்டுமே கேள்விப்பட்ட காகங்களின் புத்திக்கூர்மையை பிரான்ஸின் பிரபலமான தீம் பார்க் ஒன்று பயன்படுத்த முயற்சி எடுத்துள்ளது. அந்தத் தீம் பார்க்கில் இருக்கும் குப்பைகளைச் சேகரித்து அகற்றும் பணியை மேற்கொள்ளவிருக்கின்றன. 

மேற்கு பிரான்ஸின் வெண்டீ பகுதியில் (Vendee region) அமைந்துள்ள புய் டூ ஃபோ(Puy du Fou) எனும் பிரபலமான வரலாற்று தீம் பார்க்தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்காக ஆறு காகங்களுக்கு குப்பைகளைச் சேகரிக்கும் விதமாகப் பயிற்சியளித்துள்ளனர். அவை சிகரெட் துண்டுகளையும் மற்ற குப்பைகளையும் சேகரிக்கும். முக்கியமாகச் சிறிய அளவிலான நுண்ணிய குப்பைகளையும் இந்தக் காகங்கள் கேகரிப்பதைச் சிறப்பான செயல்பாடாகக் கருதுகின்றனர். சில காகங்கள் ஏற்கெனவே இந்த வேலையைச் செய்ய ஆரம்பித்துவிட்டனவாம். இன்னும் மீதமுள்ள காகங்கள் இந்த வாரத்தில் தங்கள் வேலையைத் தொடங்கவுள்ளன. இயல்பாகவே காகங்கள் ஒவ்வொரு நாளும் தங்களது இரையைத் தேடித்தான் பயணிக்க ஆரம்பிக்கும். ஆனால், இந்தப் பயிற்சியின் மூலம் இரைக்குப் பதிலாகக் குப்பையைச் சேகரிக்க வைத்துள்ளனர். குப்பைகளைச் சேகரித்து ஒரு பெட்டியில் போட்ட பின்னர், அதற்குத் தேவையான இரை வழங்கப்படும். இந்த முயற்சி குறித்து தீம் பார்க்கின் தலைவர் நிக்கோலஸ் டி வில்லியர்ஸ் (Nicolas de Villiers) கூறும்போது, "இந்த முயற்சியின் நோக்கம் இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வது மட்டுமல்ல, ஏனென்றால் தீம் பார்க்குக்கு வரும் பார்வையாளர்களே இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் கவனமாக இருக்கின்றனர். ஆனால், அதையும் தாண்டி இயற்கையே நமக்கு இயற்கையைப் பாதுகாப்பதற்குக் கற்றுத் தருவதாக எடுத்துக்கொள்ளலாம்" என்கிறார். 

குப்பை

இந்த முயற்சியில் ஈடுபடுத்தப்படும் காகங்களை ரூக் (Rook) என்கின்றனர். அவையும் காகத்தின் குடும்பத்தைச் சார்ந்ததுதான். சாதாரண மாகத் தென்படும் காகங்களையும் இந்த முயற்சியில் ஈடுபடுத்தும் யோசனை இருப்பதாகவும் நிக்கோலஸ் கூறுகிறார். மேலும் அவர், "மனிதர்களுடன் ஓர் உறவை ஏற்படுத்தவும் இந்தப் பயிற்சியைப் பயன்படுத்தலாம்" என்கிறார். ரூக் எனப்படும் இந்தக் காகங்கள் விரைவாக வேலை செய்யக்கூடியவை. 45 நிமிடங்களுக்குள் ஒரு பெட்டியில் குப்பைகளை நிரப்பக்கூடியவை என்கிறார் நிக்கோலஸ். ஆனால், இந்தப் பயிற்சியானது எப்படி வேலை செய்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர். கெட்ட சகுனமாகவும் அவலத்தின் அறிகுறியாகவும் மட்டுமே பார்க்கப்படும் காகங்களை மக்களுக்கு உதவும் பார்வைக்கு மாற்ற முடியும் என்றும் நிக்கோலஸ் கூறுகிறார். உண்மையில் அவை புத்திக்கூர்மை உடையவைதான். சில உயிரியலாளர்கள் காகங்கள் நேசமும் புத்திக்கூர்மையும் உடையவை. ஏறக்குறைய ஏழு வயது குழந்தைக்குரிய அறிவுத்திறன் அவற்றுக்கு இருக்கின்றன என்று ஒரு கருத்தையும் முன் வைக்கின்றனர். 

காகங்களின் புத்திக்கூர்மை குறித்த வாதங்கள் இப்போது ஒன்றும் புதிது கிடையாது. பல ஆண்டுகளாகக் கூறப்பட்டுதான் வருகின்றன. இந்த ஆண்டின் ஜுன் மாதத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பறவைகள் பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் உடையவை என்ற ஆய்வு முடிவை வெளியிட்டனர். அதில் காகங்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 2008-ம் ஆண்டில் ஒரு "காகத்தால் பொருள்கள் வழங்கும் இயந்திரம்" ஒன்றை ஜோஷ் க்ளீன் (Josh Klein) என்பவர் உருவாக்கியிருந்தார். காகமானது நாணயத்தைக் கண்டுபிடித்து பொருள்களை வழங்கும் விதமாகப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நம்முடைய வரலாற்றில் பண்டைய காலத்தில் புறாக்களை தகவல்களை அனுப்புவதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போதிருந்தே மனிதர்கள் பறவைகளின் புத்திக்கூர்மையை உணர்ந்து நேசத்துடன் இருந்துள்ளான். இப்போதிருக்கும் பொதுப்புத்தியில் காகங்கள் என்றால் அவலம். ஆனால், தாகம் தணிந்த காகம் கதையில் மட்டும் அவை புத்திக்கூர்மை உடையவை. பிரான்ஸின் தீம் பார்க் எடுக்கும் இந்த முயற்சியின் மூலம் அந்தக் கதையின் நேர்மை உண்மையாகட்டும்..

காகங்கள்

Photo : REUTERS/CAREN FIROUZ

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!