மலிவு விலையில் இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய்!- இரான் திடீர் முடிவு?

இரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில் இந்தியாவுக்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய் வழங்குவதாக இரான் அறிவித்துள்ளது. 

இரான்

சமீபத்தில் இரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாடு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதையடுத்து இரான் மீது பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வந்தது. மேலும், இரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகள் தங்கள் நடவடிக்கையை நிறுத்திகொள்ள வேண்டும் என்றும் மீறினால் அந்த நாடு மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் எந்தப் பேச்சுக்கும் இரான் செவி சாய்க்கவில்லை. தொடர்ந்து அமெரிக்கா மீதான தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்துகொண்டு வந்தது. இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள இரண்டாம் கட்ட பொருளாதாரத் தடை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. 

இந்தநிலையில், இரானிடமிருந்து அதிகம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும்  இந்தியா மற்றும் சீனா போன்ற ஆசிய நாடுகளுக்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய் வழங்க இரான் பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 14 ஆண்டுகளில் இல்லாத அளவு, சவுதி அரேபியாவைவிட மிகவும் குறைந்த விலையில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விலை நிர்ணயம் தொடர்பாக எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இந்த விலை குறைப்பு வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் இந்தியா அனுமதி கோரியுள்ளது. 

மேலும் இரானில் ஒரு நாளுக்கு 2.3 மில்லியன் பேரல்கள் விற்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய்யின் அளவு தற்போது 7,00,000 பேரல்களாக குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!