இத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு!

இத்தாலியில் உள்ள பிரமாண்ட பாலம் இடிந்துவிழுந்து 39 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ஜெனோவா மாகாணம் முழுவதும் 12 மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இத்தாலி

இத்தாலியில் பெய்த கன மழையின் காரணமாக, ஜெனோவா மாகாணத்தில் உள்ள 295 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம் மின்னல் தாக்கி இடிந்துவிழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தக் கோர விபத்தில் சிக்கி, இதுவரை 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மூன்றாவது நாளாக இன்றும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. 

பாலம் இடிந்துவிழுந்த சம்பவம், அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இத்தாலி பிரதமர் கியூசெப் கான்டே, 12 மாதங்களுக்கு ஜெனோவாவில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும், மீட்புப் பணிகளுக்காக ஐந்து மில்லியன் யூரோ ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இனி ஆட்டோஸ்ட்ரேட் (Autostrade) நிறுவனம் இடிந்த பாலத்தின் பராமரிப்புப் பணிகளைக் கவனிக்காது என்றும், அந்தப் பொறுப்பு மற்ற தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் உள்ள பெரும்பாலான சாலை மற்றும் பாலங்களின் கட்டுமானப் பணிகள், பராமரிப்பு போன்றவற்றை ஆட்டோஸ்ட்ரேட் நிறுவனம் செய்துவருகிறது. 

மொராண்டி பிரிட்ஜ் என்றழைக்கப்படும் இந்தப் பாலம் 1968ல் கட்டப்பட்டது. இத்தாலியையும் பிரான்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள கடற்கரை நகரங்களையும் இணைக்கும் முக்கியமான பாலமாக இது இருந்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!