`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி!

தைவானை நாடு என ஏன் அழைக்கக் கூடாது என சமூக வலைதளத்தில் கேள்வியெழுப்பிய இளைஞரை சீனப் போலீஸார் கைது செய்திருக்கின்றனர். 

தைவான்

தைவானை, தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகவே சீன அரசு கருதி வருகிறது. அங்கிருந்து செயல்படும் நிறுவனங்களின் இணையதளத்திலும் சீனாவின் ஒருபகுதி என்றே குறிப்பிட வேண்டும் என, சீனா தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மேலும், தைவானை நாடு என்று குறிப்பிடுவது சட்டவிரோதம் என்றும், மக்களின் உணர்வைப் புண்படுத்தும் வகையிலுமான கருத்து எனவும் சீன அரசு கூறிவருகிறது.

இந்தநிலையில், தைவானை நாடு என ஏன் குறிப்பிடக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய 18 வயது இளைஞரை சீனாவின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் மான்ஷான் நகரப் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், `சமூக வலைதளமான வீபோவில் (Weilbo) தைவான் குறித்து கருத்துத் தெரிவித்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது கருத்து சட்டவிரோதமானது மற்றும் சீன இறையாண்மைக்கு எதிரானது’ என்று தெரிவித்தனர். சீனாவில் பிரபலமான வீபோ சமூகவலைதளத்தில், `எந்தச் சட்டத்தின் அடிப்படையில் தைவானை நாடு என்று அழைக்கக் கூடாது’ என்று போலீஸாருக்கு அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அவரது முழுப்பெயரை போலீஸார் வெளியிடாத நிலையில், அவர் யாங் (Yang) என்ற குடும்பப் பெயருடன் அடையாளப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தனர். 
1949-ல் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் விளைவாக சியாங் கய் ஷேக் (Chiang Kai-shek) தலைமையிலான தேசியவாதக் கட்சியினர், மா ஜெடோங் (Mao Zedong) தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியைத் தவிர்த்து தைவானில் குடியேறினர். அப்போது தொடங்கிய பிரச்னை இதுவரை முடிவுக்கு வரவில்லை. தைவான், தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள பகுதிதான் என சர்வதேச அரங்கில் சீனா மார்தட்டி வருகிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!