பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இன்று பதவியேற்கிறார் இம்ரான் கான்!

பாகிஸ்தானின் 22-வது பிரதமராக தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் இன்று பதவியேற்க உள்ளார்.

இம்ரான் கான்

பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் 117 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனாலும் பெரும்பான்மைக்குத் தேவையான 172 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலவியது. இதையடுத்து, அங்குள்ள மற்ற சிறிய மற்றும் சுயேச்சைக் கட்சிகளின் ஆதரவைக் கேட்டிருந்தார் இம்ரான் கான். 

இந்தநிலையில், நேற்று நடைபெற்ற இதற்கான வாக்கெடுப்பில் இம்ரான் கான் 176 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றிபெற்றார். பாகிஸ்தானின் மற்றொரு பெரிய கட்சியான நவாஸ் ஷெஃரீப்பின் கட்சிக்கு 96 பேர் வாக்களித்திருந்தனர். வெற்றி பெற்ற உற்சாகத்தில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்த அவர், தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி எனக் கூறினார். மேலும், நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் பதில் கூறியே ஆக வேண்டும் என ஆவேசத்துடன் கூறினார். இந்த வெற்றியைத் தொடர்ந்து இன்று பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான்கான் பதவியேற்க உள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!