`அபராதத்தை நானே கட்டிவிடுகிறேன்!’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி

துபாய் போலீஸ் அதிகாரி ஒருவர், அபராதம் கட்ட பணமில்லாமல் தவித்த பெண்ணுக்கு 10,000 திர்ஹம் கொடுத்து உதவி செய்துள்ளார். இதனால் அவர் சிறையில் அடைக்கப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கு போலீஸ் அதிகாரி உதவி செய்தற்கான காரணம் துபாய் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

துபாய் போலீஸ்
 

ரஷீடியா போலீஸ் நிலையத்தின் உயர் அதிகாரி லெப்டினென்ட் அப்துல் ஹாடி, இன்று காலை நீதிமன்ற அலுவலகத்தில் தன் வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு மூச்சிறைக்க ஓடி வந்த ஒரு நபர்.. `என் மனைவியைத் தயவு செய்து காப்பாற்றுங்கள். என் மனைவி சிறைக்குச் செல்லக் கூடாது. எங்கள் 7 மாதக் குழந்தை தாயின்றி தவித்துப்போய்விடும்’ என்று கதறினார். அந்த நபரை சமாதானப்படுத்திய அப்துல் ஹாடி, `பதற்றப்படாமல் முழு விவரத்தைச் சொல்லுங்கள்’ என்று கூறினார்.

அந்த நபர் விவரிக்க தொடங்கினார்... `நான் சிறுதொழில் செய்து வருகிறேன். அந்தத் தொழிலில் திடீரென நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இதனால் நான் முன்னர் கொடுத்த செக் அனைத்தும் பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டது. என் மனைவியின் பெயரில்தான் என் தொழிலை மேற்கொண்டு வருகிறேன். இதனால் அனைத்துச் செக்கிலும் அவர்தான் கையெழுத்துப் போடுவார். தற்போது செக் பவுன்ஸ் ஆகிவிட்டதால், சம்பந்தப்பட்ட நபர்கள் போலீஸில் புகார் கொடுத்துவிட்டனர். நீதிமன்றத்தில் என் மனைவிக்குப் பதில் நான் சிறைக்குச் செல்ல தயார் என்று கூறியும் பலனில்லை. என் உறவினர்கள், நண்பர்கள் எனக்கு பண உதவி செய்ய முன்வரவில்லை. நீதிமன்றத்தில் அபராதம் கட்ட தவறியதால் என் மனைவிக்கு 100 நாள்கள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. என் 7 மாதக் குழந்தை தாயில்லாமல் எப்படியிருக்கும்? எனவே, என் மனைவிக்குப் பதில் என்னை சிறையில் அடைக்க உதவி செய்யுங்கள்” என்று அழுகையுடன் கூறியுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் கையில் குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அப்துல் ஹாடிக்கு மனம் கலங்கிப் போனது. இதையடுத்து சற்றும் யோசிக்காமல் அந்த நபர் செலுத்த வேண்டிய 10,000 திர்ஹம் அபராதப் பணத்தையும் அவரே செலுத்தியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணை நீதிமன்றம் விடுவித்தது.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் துபாய் ஊடகங்களில் வெளியானதையடுத்து போலீஸ் அதிகாரிக்குப் பாராட்டுகள் குவிகின்றன. 

Source : Khaleej times

Do you like the story?

Please Appreciate the Author by clapping!