அமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..! கணவன் சிக்கிய காரணம்

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்ணைக் கொன்ற வழக்கில் அவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் கிரிஸ்டோபர் வாட்ஸ். அவரின் மனைவி ஷேனான் வாட்ஸ். அவர் கர்ப்பிணியாக இருந்தார். அவர்களது குழந்தைகள் பெல்லா (4 வயது), செலிஸ்டீ (3 வயது). கிரிஸ்டோபர் வாட்ஸ், அவரின் மனைவி மற்றும் மகள்கள், காணாமல் போய்விட்டனர். அவர்கள் திரும்பி வர வேண்டும் என்று ஒரு வாரத்துக்கு முன்னதாக ஃபேஸ்புக்கில் தொடர்ச்சியாக உருக்கமானப் பதிவுகளைப் பதிவிட்டுவந்தார்.

அவர்களுடனான நினைவுகளைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். அவருடைய பதிவுகள் எல்லோருக்கும், அவர்மீது இரக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. காவல்துறையும் காணாமல் போனவர்களைப் பற்றி விசாரணை நடத்திவந்தனர். காவல்துறையினர் விசாரணையில், ஷேனான் வாட்ஸின் உடல் அனாடார்கோ பெட்ரோலியம் நிறுவனத்துக்குச் சொந்தமான இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது. குழந்தைகளான பெல்லா மற்றும் செலிஸ்டியின் உடல்களும் அருகில் கண்டெடுக்கப்பட்டன. கேஸ் மற்றும் எண்ணெய் நிரப்பப்பட்ட உருளைகளிலிருந்து அழுகிய நிலையில் பெல்லா மற்றும் செலிஸ்டியின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில், உடல்கள் கண்டெடுக்கப்பட்ட மறுநாள் (வியாழக்கிழமை) குழந்தைகளின் தந்தை மற்றும் கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் கிரிஸ்டோபர் வாட்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல்துறை, மூன்று பேரையும், கிரிஸ்டோபர்தான் கொலை செய்தது தெரியவந்துள்ளது என்று அறிவித்துள்ளனர். மூன்று உடல்களும் புதைக்கப்பட்ட இடம், கிரிஸ்டோபர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வேலை பார்த்த இடம் என்பது தெரியவந்துள்ளது. மேலும், சில ஆதாரங்கள் மூலம், கிரிஸ்டோபர்தான் கொலை செய்துள்ளார் என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது, கிரிஸ்டோபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!