வெளியிடப்பட்ட நேரம்: 08:26 (20/08/2018)

கடைசி தொடர்பு:08:28 (20/08/2018)

அண்டை நாடுகளுடனான உறவைப் பலப்படுத்த வேண்டும் - இம்ரான்கான் பேச்சு!

பாகிஸ்தானுக்கு அருகில் இருக்கும் நாடுகளுடனான உறவை பலப்படுத்த வேண்டும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். 

இம்ரான் கான்

பாகிஸ்தானின் 22-வது பிரதமராக கடந்த 18-ம் தேதி தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பதவியேற்றார். இவர் பதவியேற்ற பிறகு நேற்று முதல்முறையாக அந்நாட்டு ஊடகங்கள் வழியாக மக்களிடம் பேசினார். 

அந்த நிகழ்ச்சியில் பேசிய இம்ரான் கான் கூறும்போது, “அண்டை நாடுகளுடனான உறவை பலப்படுத்தவே பாகிஸ்தான் விரும்புகிறது. பாகிஸ்தானில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகப் போராட வேண்டும். மக்களின் வரிப் பணம் அவர்களின் நலனுக்காக மட்டுமே செலவழிக்கப்படும். உங்களின் பணம் முற்றிலும் பாதுகாக்கப்படும் என நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். நாங்கள் தினமும் எவ்வளவு பணம் சேமிக்கிறோம் என்பதை இனி மக்களுக்குக் காட்டுவோம். பாகிஸ்தான் வரலாற்றிலேயே இப்படி ஒரு கடன் சுமையை யாரும் கண்டதில்லை. கடனைத் திருப்பி செலுத்தவே மேலும் மேலும் கடன் வாங்க வேண்டிய நிலையில் தற்போது பாகிஸ்தான் அரசு உள்ளது. நாட்டைச் சூறையாடியவர்களை என்றும் விட்டுவைக்கப் போவதில்லை” எனக் கூறினார்.