'நிரவ் மோடி இங்குதான் இருக்கிறார்' - உறுதி செய்த இங்கிலாந்து; இந்தியா கொண்டு வர சி.பி.ஐ தீவிரம்!

Nirav modi

மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே அவர் மீதும், அவரின் குடும்பத்தினர் மீதும் சி.பி.ஐ, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்திவருகிறது. இது பலரின் கவனத்துக்கு வரும் முன்னரே அவரும், குடும்பத்தினரும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர். அவர்களைக் கண்டறிந்து மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வரும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தார்கள். சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டை பிறப்பித்திருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் இன்டர்போல் அமைப்பும் ரெட் கார்னர் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டது.

 பஞ்சாப் நேஷனல் வங்கி

மற்றொரு முக்கிய குற்றவாளியான அவரின் மாமா மெஹுல் சோக்‌ஷி ஆன்டிகுவா நாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், நிரவ் மோடியின் இருப்பிடம் குறித்த தகவல்கள் தெளிவாகக் கிடைக்கவில்லை. அவர் போலி பாஸ்போர்ட் மூலமாக ஆறு நாடுகளுக்குப் பயணம் செய்து வந்திருக்கிறார் என்பதை இன்டர்போல் அமைப்பு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னால் கண்டறிந்தது.  இந்த நிலையில், தற்பொழுது அவர் இங்கிலாந்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அந்நாட்டு அதிகாரிகள்  இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து அவரைத் தடுத்து காவலில் வைப்பதற்கும் இங்கிலாந்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான வேலைகளில் சி.பி.ஐ இறங்கியுள்ளது. இது தொடர்பான கோரிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!