கேரளாவுக்கு ரூ.700 கோடி வழங்கியது ஐக்கிய அரபு எமிரேட்! - பினராயி விஜயன் உருக்கம் | UAE to donate Rs 700 crore for kerala

வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (21/08/2018)

கடைசி தொடர்பு:12:05 (22/08/2018)

கேரளாவுக்கு ரூ.700 கோடி வழங்கியது ஐக்கிய அரபு எமிரேட்! - பினராயி விஜயன் உருக்கம்

கேரள மாநிலத்தின் மறுசீரமைப்புப் பணிகள் குறித்து ஆலோசிக்க வரும் 30-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

அரபு எமிரேட்ஸ்
 

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கிய கனமழை இரண்டு வாரங்களுக்கு மேலாகப் பெய்து மாநிலத்தை வெள்ளக் காடாக மாற்றியது. தற்போது மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் வரும் 25-ம் தேதி வரை லேசான மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை குறைந்துள்ளதால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் தங்கள் வீடுகளைப் பார்க்கச் செல்கின்றனர். வீடுகளில் தேங்கியிருக்கும் மழை நீர் சற்று வடியத் தொடங்கியுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய வீடுகள்தான் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக பினராயி விஜயன் அறிவித்தார். வரலாறு காணாத இந்த சேதத்தால், கேரள கனமழையை தீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. 

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன்,  `மீட்பு நடவடிக்கை, மறு சீரமைப்புப் பணிகள், நிவாரணம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வரும் 30-ம் தேதி அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டம் கூட்ட ஆளுநருக்கும் பரிந்துரை செய்துள்ளேன்’ என்று தெரிவித்தார். மேலும், ஐக்கிய அரபு எமிரேட் அளித்த நிவாரண நிதி குறித்துப் பேசிய பினராயி,  `வெள்ள பாதிப்புகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட் ரூ.700 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

முன்னர், ஐக்கிய அரபு எமிரேட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மேக்தம் கேரள வெள்ளம் குறித்து பகிர்ந்த ட்விட்டர் பதிவில்,  `ஐக்கிய அரபு நாடுகளின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு கேரள மக்களின் பங்கு அதிகம். தற்போது வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவுக்கு சிறப்பு உதவி செய்வது மிக அவசியம்’ என குறிப்பிட்டிருந்தார். 

கேரளாவுக்காக ஐக்கிய அரபு எமிரேட் அரசு மட்டுமன்றி  அங்கு வசிக்கும் தொழிலதிபர்களும் தொடர்ந்து நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். #UAEStandsWithKerala  என்னும் ஹேஷ்டாக்கின் கீழ் ஐக்கிய அரபு எமிரேட் வாழ் இந்தியர்களுக்கு கேரள மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க