`அமைதியின் தூதுவர்!’ - சித்துவைப் புகழ்ந்த பாக். பிரதமர் இம்ரான் கான்

'அமைதியின் தூதுவர் சித்து' என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாரம் சூட்டியிருக்கிறார். 

இம்ரான் கான் பதவியேற்பு விழா


பாகிஸ்தான் பிரதமராக, இம்ரான் கான் கடந்த 18-ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஜனாதிபதி மம்னூன் ஹூசைன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அந்த நிகழ்ச்சியில், இந்தியாவிலிருந்து பஞ்சாப் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து கலந்துகொண்டார். அப்போது, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜவேத் பஜ்வாவை அவர் கட்டியணைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அதிபர் அருகில் சித்துவுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததும் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி - சித்து

பாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டியணைத்தது தொடர்பாக, சித்து மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யக் கோரி பீகாரின் முசாஃபர்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கும் சித்துவுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் உள்பட, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சித்துவின் செயலை விமர்சித்திருந்தனர். 

இம்ரான் கான் ட்வீட்

இந்த நிலையில், சித்துவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ட்விட்டரில்  இம்ரான் கான், ``என்னுடைய பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வந்த சித்துவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அமைதியின் தூதுவரான அவருக்கு, பாகிஸ்தான் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்தியாவில் அவருக்கு எதிராகப் பேசிவருபவர்கள், பிராந்திய அமைதிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார்கள். அமைதி இல்லாமல் மக்கள் முன்னேற முடியாது. இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் தங்களிடையே ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன்வர வேண்டும். பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயல்வதும், பொருளாதாரரீதியான பரிமாற்றங்களுமே இந்தப் பிராந்தியத்தில் வசிக்கும் மக்களின் வறுமையைப் போக்கும் ஒரே வழி’’ என்று பதிவிட்டிருக்கிறார்.   
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!