`முதல் வகுப்பு விமானத்தில் பயணிக்க தடை' - அதிரடியில் இறங்கும் இம்ரான் கான்

முக்கிய அதிகாரிகள் முதல் வகுப்பு விமானத்தில் பயணிக்க பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. 

இம்ரான் கான்

பாகிஸ்தானின் 22-வது பிரதமராக தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைவரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் கடந்த 18-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற நாள்முதலே அதிரடியாகப் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். முன்னதாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காகப் பிரார்த்திக்கிறோம், தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கப் பாகிஸ்தான் தயாராக உள்ளது' எனக் கூறி ஆச்சரியப்பட வைத்தார். 

இந்நிலையில், பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் நிதி நிலைமைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், பல திட்டங்கள் மற்றும் தடைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 

நடைபெற்ற கூட்டத்தில், அரசாங்கத் துறைகளில் 6 நாள்கள் வேலை செய்யவேண்டும் என்ற நடைமுறையை மாற்றி 5 நாள்கள் வேலை என்ற புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மாற்றம் அரசாங்க ஊழியர்களை அந்நியப்படுத்தக்கூடும் என்று சில அமைச்சர்கள் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும் திட்டம் அறிமுகமானது. அதேபோல், ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதி, முதலமைச்சர்கள், செனட் தலைவர்கள் மற்றும் தேசிய சட்டமன்ற பேச்சாளர்கள் உள்ளிட்டோர் சர்வதேச விமானங்களில் முதல் வகுப்பு கட்டணத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் சர்வதேச விமானங்களின் கட்டணத்தைவிட, இவர்கள் பயணிக்கும் செலவு மிகவும் அதிகம் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

அரசாங்கத் துறைகளில் பணிபுரிவார்களின் வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையாகவும், 9 மணி முதல் மாலை 5 மணியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!