`கேரளா வெள்ளத்துக்கு முன்...வெள்ளத்துக்குப் பின்..!' - நாசா வெளியிட்ட புகைப்படம் | NASA has released the image of Kerala after and before the flood

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (28/08/2018)

கடைசி தொடர்பு:14:00 (28/08/2018)

`கேரளா வெள்ளத்துக்கு முன்...வெள்ளத்துக்குப் பின்..!' - நாசா வெளியிட்ட புகைப்படம்

கேரளாவில் பெய்த கனமழைக்குப் பிறகு, செயற்கைக்கோள்மூலம் எடுக்கப்பட்ட அம்மாநிலத்தின் புகைப்படங்களைத் தற்போது நாசா வெளியிட்டுள்ளது. 

நாசா புகைப்படம்

கேரளாவில், கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கிய மழை, படிப்படியாக அதிகரித்து விஸ்வரூபம் எடுத்தது. இதனால், வரலாறு காணாத அளவுக்கு மாநிலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. முன்னதாக, அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, தனது செயற்கைக்கோள்மூலம் இந்த வருடம் இந்தியாவில் பொழிந்த தென்மேற்குப் பருவமழைகுறித்த வீடியோவை வெளியிட்டது. 

கேரளா வெள்ளம்

கேரளாவுக்கு கனமழையைக் கொண்டுவந்து சேர்த்ததில், மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு முக்கியப் பங்குண்டு. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் நிலப்பரப்பு, இமயமலையைக் காட்டிலும் சிறியது என்றாலும், இந்த மலைத்தொடர் இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு நேர்கோட்டில் அமைந்துள்ளது. மேலும், இந்த மலைத்தொடரின் பல சிகரங்கள் 2,000 மீட்டர் (6,500 அடி) அளவுக்கு அமைந்துள்ளன. அதன் விளைவாக, மேற்குத்தொடர்ச்சி மலை, அரபிக்கடலிலிருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து, அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்குக் கடற்கரையில் நல்ல மழையைத் தருகிறது. இம்முறையும் அப்படிதான். ஈரப்பதத்தைத் தடுத்து, கேரளா நிலப்பரப்பின்மீது உருவான அடர்த்தியான மேகங்கள் அதிக மழையைப் பொழியும்படிச் செய்துவிட்டன. அதாவது, கேரளாவில் பெய்த கனமழைக்கு முக்கியக் காரணம், `Concentrated Cloud band' தான் என நாசா விளக்கியிருந்தது. 

நாசா புகைப்படம்

இந்த நிலையில், கேரளா குறித்த இரண்டு புகைப்படங்களில் ஒன்றை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி 6-ம் தேதியன்று எடுத்த புகைப்படத்துடன் ஒப்பிட்டு, ஆகஸ்ட் 22-ம் தேதியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காட்சிகளை ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் Sentinel-2 செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. முதல் புகைப்படம், தி லேண்ட்சாட் 8 செயற்கைக்கோளின் லேண்ட் இமேஜர் (OLI) மூலம் எடுக்கப்பட்டது. 

நாசா வெளியிட்ட புகைப்படத்தில், நீரின் அளவு நீல நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.