``முதலில் தன் மகளே இல்லை என்றார்... பிறகு வருந்தினார்!” அப்பா ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி மகள் லிசா

ஸ்டீவ் ஜாப்ஸின் மூத்த மகள், லிசா ப்ரேன்னன் ஜாப்ஸ் தந்தையுடனான உறவு பற்றியும், அவருடன் லிசா கழித்த வலிமிகு சூழ்நிலையை எதிர்கொண்ட விதம் பற்றியும், `ஸ்மால் ஃப்ரை' என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார்.

``முதலில் தன் மகளே இல்லை என்றார்... பிறகு வருந்தினார்!” அப்பா ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி மகள் லிசா

``உன் மீது கழிப்பறை நாற்றம் வீசுகிறது!”

ஒரு தந்தை தன் மகளைப் பார்த்து இப்படிக் கூறமுடியுமா. ஆனால், சிந்தனைக்காகவும் கற்பனைக்காகவும் உலகமே வியந்து பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் இப்படித்தான் மகளைப் பார்த்துக் கூறியிருக்கிறார். ஸ்டீவ் ஜாப்ஸின் மூத்த மகள், லிசா ப்ரேன்னன் ஜாப்ஸ் (Lisa Brennan Jobs). தந்தையுடனான உறவு பற்றியும், அவருடன் லிசா கழித்த வலிமிகு சூழ்நிலையை எதிர்கொண்ட விதம் பற்றியும், `ஸ்மால் ஃப்ரை’ (Small Fry) என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார்.

லிசா

ஸ்டீவ் ஜாப்ஸ், தன்னுடன் பள்ளியில் படித்த கிறிஸன் ப்ரென்னன் (Chrisann Brennan) என்பவரைக் காதலித்தார். ஸ்டீவ் ஜாப்ஸுக்கு 23 வயதாகும்போது, 1978 மே 17-ம் தேதி, லிசா பிறந்தார். கிறிஸன்னின் பிரசவம், அவரின் நண்பர் ராபர்ட் வீட்டில்தான் நடந்தது. குழந்தை பிறந்து சில நாள் கழித்துதான் பார்க்கவே வந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். குழந்தையைப் பார்த்ததும் முதலில் கூறிய வார்த்தை, ``இது என் குழந்தையே இல்லை!”

லிசாவுக்குக் கறுப்பு நிற தலைமுடியும் பெரிய மூக்குமாக இருந்தது. இதைப் பார்த்த நண்பர் ராபர்ட், ``இவள் நிச்சயம் உன்னைப்போல்தான் இருக்கிறாள்” என்றபோதும், ஜாப்ஸ் ஒப்புக்கொள்ளவே இல்லை.

ஸ்டீவ் ஜாப்ஸ்

லிசாவுக்கு இரண்டு வயதாகும் வரை, கிடைத்த வேலைகளைச் செய்து பிழைத்து வந்தார் அம்மா கிறிஸன். பின்னர், தன் குழந்தையின் நலன் கருதியும் தனக்காகவும் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றத்தின் உத்தரவின்படி, டி.என்.ஏ சோதனை நடந்தது. 1980-களில் இந்தச் சோதனை எடுப்பது மிகவும் புதிது. இதில், ஸ்டீவ் ஜாப்ஸே `லிசாவின் தந்தை' என்பது உறுதியானது. இதனால், லிசாவை வளர்க்க மாதம் 385 டாலர்கள் கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனம் பிரபலமடைந்து, மல்டிமில்லியனராக உயர்கிறார். இந்தத் தொகையும் 500 டாலராக உயர்கிறது.

ஸ்டீவ் ஜாப்ஸ்

இந்தப் புத்தகத்தில், தன் தந்தையுடனான கடினமான நாள்களையும் தனது வலியான தருணங்களையும் லிசா கூறியிருந்தாலும், தந்தையைக் கடுமையாகக் குறை சொல்லவோ, குற்றச்சாட்டவோ இல்லை. `அவர் மிகவும் விநோதமான நேர்மையைக் கடைப்பிடித்தார். அவரின் அதீத கண்டிப்பான குணம், எனக்கு நிறைய வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது' எனக் குறிப்பிட்டிருக்கிறார். `அவர் திறமையான அப்பாவாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒரு ஜீனியஸ்" என்று கூறுகிறார் லிசா. 

ஸ்டீவ் ஜாப்ஸ் தன் பிசினஸ் பார்ட்னர்களிடமும் தன் சக ஊழியர்களிடமும் மிகவும் கடுமையாக நடந்துகொள்வார் என்ற கருத்து உண்டு. அதை உறுதிசெய்யும் விதமாக, மகளின் புத்தகம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவனத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்ட பின்னரே, லிசாவிடமும் கிறிஸன் ப்ரேன்னனிடமும் நடந்துகொண்ட விதம் பற்றி வருந்தியிருக்கிறார். லிசாவுக்குத் தன் சொத்தில் சில பங்குகளையும் எழுதியிருக்கிறார், ஒரு பேட்டியில் அதையும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ஸ்டீவ் ஜாப்ஸ், தன் இறுதி நாள்களை, லிசாவுடன் கழித்த நாள்களைப் பற்றியும், அவரை லிசா எப்படி அணுகினார் என்பதைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

ஸ்டீவ் ஜாப்ஸின் பார்வையிலிருந்து கூறப்படும் இந்தப் புத்தகத்தை, லிசா ப்ரென்னன் கடந்த மார்ச் மாதம் எழுதத் தொடங்கினார். வரும் செப்டம்பர் 4-ம் தேதி இது வெளியாகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!