வெளியிடப்பட்ட நேரம்: 19:34 (28/08/2018)

கடைசி தொடர்பு:19:34 (28/08/2018)

44 ஆண்டுகள் கழித்து முடிக்கப்பட்ட ஒரு படகுப் பயணத்தின் கதை!

இது 44 ஆண்டுக்கால கனவு. இன்னும் சொல்லப்போனால், 44 ஆண்டுகளுக்கு முன்னர் முடிக்கப்படாத கனவின் தொடர்ச்சிதான் இந்தப் பயணத்தின் தொடக்கம். அது 1974-ம் ஆண்டு... கோடைக்காலம்.

44 ஆண்டுகள் கழித்து முடிக்கப்பட்ட ஒரு படகுப் பயணத்தின் கதை!

ல்ல மழை. வானம் சற்றே இருண்டிருந்தது. குளிர். அமெரிக்காவின் தென்கிழக்கில் ஒரு மிகச் சிறிய கடற்கரை நகரம் அது. கெட்சிகன் (Ketchikan) என்று அதைக் குறிப்பிடுவார்கள். வருடத்தின் பெரும்பாலான நேரங்களில் அங்கு மழை இருந்துகொண்டேதானிருக்கும். சற்று ஒல்லி. இரண்டு பக்க முனைகளும் நல்ல கூர்மை. மரத்தின் நிறத்தில் நல்ல நீளமாக இருந்தன அந்த இரண்டு படகுகளும். அதில் ஒன்று 43 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டது. ஆனால், தற்போது கட்டியதுபோல சிறப்பாகச் செப்பனிடப்பட்டிருந்தது. இன்னொன்று புதிய படகுதான். அது பார்த்தவுடனே தெளிவாகத் தெரிந்தது. 

படகுப் பயணம்

பண்ட பாத்திரங்கள் அடுக்கப்பட்டன. இரண்டு நீல நிற பிளாஸ்டிக் கேன்கள் படகினுள் வைக்கப்பட்டன. அதில்தான் அவர்களுக்கான அடிப்படை உணவுப் பொருள்கள் இருக்கின்றன. மரப் பீப்பாயில் குடி தண்ணீர் நிரப்பப்பட்டது. எல்லாம் முடிந்து கிளம்புவதற்கு முன்னர் மொத்தப் படகும் மஞ்சள் நிற தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டது. முன்னால் ஒருவரும் பின்னால் ஒருவரும் உட்காரும் அந்த இடத்தைத் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டன. மெல்லிய சிரிப்போடும் பரவசத்தோடும், ஒருவித பதற்றத்தோடும் முதல் படகு கிளம்பியது. முன்னால் 65 வயது ஆலன் (Alan) உட்கார்ந்து துடுப்புப்போட, முன்னால் 63 வயதான அவருடைய தம்பி ஆன்டி (Andy) துடுப்புப் போட்டார். 
அடுத்த படகில் ஆலனின் மகன்கள் நேட் டேப்பன் (Nate Dappen) மற்றும் பென் டேப்பன் (Ben Dappen) கிளம்பினார்கள். அவர்கள் முகத்தில் அத்தனை சிரிப்பு. அவ்வளவு மகிழ்ச்சி. 

இது 44 ஆண்டுக்கால கனவு. இன்னும் சொல்லப்போனால், 44 ஆண்டுகளுக்கு முன்னர் முடிக்கப்படாத கனவின் தொடர்ச்சிதான் இந்தப் பயணத்தின் தொடக்கம். 

அது 1974-ம் ஆண்டு... கோடைக்காலம். 

அமெரிக்கா படகுப் பயணம்

ஆலனுக்கு இதை எப்படியாவது செய்திட வேண்டுமென்ற ஆசை. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். 

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் `இன்சைட் பாஸேஜ்’ (Inside Passage) என்று சொல்லக்கூடிய ஒரு கடல் வழி உண்டு. எத்திசையும் பரந்து விரிந்திருக்கும் கடல், ஆழம், ஆங்காங்கே சிறு சிறு தீவுகள், பெரு மலைகள் என அத்தனை அழகாக இருக்கும். கொஞ்சம் ஆபத்துகளும் நிறைந்ததுதான். இந்தப் பகுதியைக் கடக்க வேண்டும் என்பதுதான் ஆலனின் ஆசை.

பிடித்ததை செய்வதைவிட வாழ்க்கையில் வேறென்ன பெரிய நோக்கம் இருந்திட முடியும் என்பது ஆலன் வாழ்வின் அடிப்படைத் தத்துவம். உடனடியாகப் பயணத்துக்குத் தயாரானார். அவருடன் அவர் தம்பியும் கிளம்பத் தயாரானார். இதுகுறித்து தன் காதலி சாராவிடம் சொன்னார் ஆலன். 

சாராவுக்கு அது பிடித்திருந்தது. அவருக்கும் ஆலனுடன் போக வேண்டும் என்ற ஆசை. ஆனால், ஆலனுக்கும் அவருக்கும் பிறந்திருந்த நேட், அப்போது கைக்குழந்தை. தன் அப்பா, அம்மாவிடம் போய் விஷயத்தைச் சொன்னார் சாரா. அவர்கள் ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் சாராவை அழைத்துச் சென்றார்கள்!

பின்னர், சாராவும் பயணத்துக்குக் கிளம்பினார். 

பயணம்

அதுவரை காணாத காட்சிகளைக் கண்டார்கள். அது அத்தனையும் பேரழகு. இயற்கையின் ஆச்சர்யத்தை ஒவ்வொரு நொடியும் அனுபவித்தார்கள். இதோடு சேர்ந்து ஆலனுக்கு சாரா, சாராவுக்கு ஆலன் என ஒருவருக்கொருவர் பெருங்காதலைப் பகிர்ந்துகொண்டார்கள். இப்படியாக அவர்களின் அந்தப் பயணம் முடிந்தது.

பெரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தார்கள். சின்ன வயதிலிருந்தே தங்களின் இரண்டு குழந்தைகளுக்குப் பயணக் கதைகளைச் சொல்லியே வளர்த்தார்கள். அவர்கள் வாழ்வை அவர்களே தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். நேட் ஓர் ஆவணப்பட இயக்குநராக, காட்டுயிர் புகைப்படக்காரராக ஆனார். 

2015-ம் ஆண்டு நேட்டுக்கு திருமணம். தன் காதலியைக் கரம் பிடித்தார். திருமணம் முடிந்து எல்லோரும் குடும்பமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பழைய படகுப் பயணம் குறித்த பேச்சு வந்தது. பேசிக்கொண்டிருக்கும்போது...

"அந்தப் பயணத்தை முழுமையாக முடித்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை என்கிற வருத்தம் 40 ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் எனக்கிருக்கிறது" என்றார் ஆலன். 

அமெரிக்கா - கனடா கடல் பயணம்

"முழுமையாக முடிக்கவில்லையா?" - இது நேட்டின் கேள்வி.

"ஆமாம்...இன்னும் 300 மைல்கள் மிச்சமிருந்தன. அதற்குள் கோடை விடுமுறை முடிந்துவிட்டதால் சாரா கிளம்ப வேண்டிய சூழல். அவள் கிளம்பியதால் என்னாலும் தொடர முடியவில்லை. அவளுடனே நானும் திரும்பிவிட்டேன். நான் கிளம்பியதும் ஆன்டியும் கிளம்பிவிட்டான். அது ஒரு முடிவுபெறாத பயணமாகவே முடிந்துவிட்டது..." என்று சொல்லி சிரித்தார். ஆனால், ஆலனின் கண்களில் அது குறித்த சின்ன ஏக்கம் இருந்தது நேட்டுக்குப் புரிந்தது. 

அமெரிக்கா - கனடா கடல் பயணம்

அந்த நொடி நேட் முடிவு செய்துவிட்டார். தன் அப்பாவின் கனவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டுமென்று. ஆனால், நாளுக்கு நாள் ஆலனின் உடல் தளர்ந்துகொண்டே வந்தது. துரிதமாகப் பயண ஏற்பாடுகள் நடந்தன. பயணம் தொடங்கியது. 44 ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் விட்டிருந்த இடத்திலிருந்து பயணத்தைத் தொடங்கினார்கள். பயணத்தைத் தொடர்ந்தார்கள். பாதி வழியிலேயே நேட்டின் மனைவி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவர் கிளம்ப வேண்டிய சூழல். ஆனால், ஆலன் பயணத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டார். 

ஆலனும், ஆன்டியும் தாங்கள் முடித்திடாத அந்தப் பயணத்தை முடித்தார்கள். ஆலனின் கண்களில் ஓரத்தில் பல ஆண்டுக்காலமாகத் தேங்கியிருந்த அந்த ஏக்கம் முற்றிலுமாக மறைந்துபோனது. 

கடல் பயணம்

Images Courtesy: Last Frontier Magazine: The Passage

நேட்டுக்குப் பெண் குழந்தைப் பிறந்தது. 

இன்று பெரும் மகிழ்ச்சியோடு வாழ்க்கையைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது மொத்த குடும்பமும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்