`பிரதமர் பயன்படுத்தும் சொகுசு கார்கள் ஏலம்' -சிக்கன நடவடிக்கையில் அசத்தும் இம்ரான் கான் | Pakistan government has decided to go auction of luxury surplus vehicles

வெளியிடப்பட்ட நேரம்: 08:32 (02/09/2018)

கடைசி தொடர்பு:08:40 (02/09/2018)

`பிரதமர் பயன்படுத்தும் சொகுசு கார்கள் ஏலம்' -சிக்கன நடவடிக்கையில் அசத்தும் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் பயன்படுத்தும் விலை உயர்ந்த சொகுசு ரக கார்களை ஏலத்தில் விட அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தானில் 22-வது பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான், பதவியேற்ற நாள்முதலே அதிரடியாகப் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். முன்னதாக, அண்மையில் நடந்து முடிந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதி, முதலமைச்சர்கள், செனட் தலைவர்கள் மற்றும் தேசிய சட்டமன்ற பேச்சாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் முதல் வகுப்பு விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

இந்த நிலையில், மீண்டும் ஒரு புதிய அறிவிப்பை இம்ரான் கான் தலைமையிலான அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, பிரதமர்கள் பயன்பாட்டிற்காக உள்ள விலை உயர்ந்த சொகுசு ரக கார்களை ஏலத்தில்விட்டு விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மெர்சிடஸ் பென்ஸ், 8 பி.எம்.டபிள்யூ கார்கள்,  4,000சிசி திறன்  கொண்ட 2 புல்லட் ப்ரூப் வாகனங்கள், 16 டொயோட்டா கார்கள், 4 புல்லட் ப்ரூக் லேண்ட் குரூசர் கார்கள், லெக்ஸஸ் ரக கார்கள் உள்ளிட்ட சொகுசு கார்களை வரும் செப்டம்பர் 17-ம் தேதி ஏலம் விடப்படுகிறது.

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானை மீட்டெடுக்கச் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இம்ரான், பிரதமருக்கான அரசு பங்களாவில் தான் வசிக்கப்போவதில்லை என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.