பற்றி எரியும் பிரேசில் அருங்காட்சியகம்! - 100 வருடப் பழைமையான பொருள்கள் சேதம்

பிரேசில் நாட்டில் உள்ள மிகப் பழைமையான அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால் 100 வருடப் பழைமையான பொருள்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளது. 

அருங்காட்சியக தீ விபத்து

பிரேசில் நாட்டின் மிக முக்கியமான மற்றும் 200 வருடங்கள் பழைமையான தேசிய அருங்காட்சியகம் ரியோ டி ஜெனிரோவில் (Rio de Janeiro) உள்ளது. அங்கு ஏற்பட்ட திடீர் தீயால் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருள்கள் தீயில் கருகியுள்ளது. இங்கு 20 மில்லியன் பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகம்

எப்போதும் போன்று நேற்று இரவு மக்கள் பயன்பாட்டுக்குப் பின்னர் அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஏற்பட்ட தீ தொடர்ந்து தற்போது வரை எரிந்து வருகிறது. விபத்து ஏற்பட்டதுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால், பிரேசிலின் வரலாறு மற்றும் கணக்கிடமுடியாத பாரம்பர்ய பொருள்கள் தீயில் எரிந்துள்ளதாக அருங்காட்சியகத்தின் துணை இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. 

அருங்காட்சியகம்

``இது தென் அமெரிக்காவின் மிகப் பெரிய இயற்கை அருங்காட்சியகம். இங்கு மதிப்பிடமுடியாத பல சேகரிப்புகள் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் 100 வருடப் பழைமையானவை” என அருங்காட்சியகத்தின் துணைத் தலைவரான கிறிஸ்டியனா செஜிரோ தெரிவித்துள்ளார்.

பிரேசில் அருங்காட்சியகம்

இந்த அருங்காட்சியகத்தில் போர்ச்சுகல், எகிப்து, கிரேக்கம், ரோமனில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள்கள்,  ‘லுஸியா’ என்ற 12,000 வருடங்கள் பழைமை வாய்ந்த எலும்புக்கூடு வைக்கப்பட்டிருந்தது. இது அமெரிக்காவில் உள்ள மிகவும் பழைமையான ஒரே எலும்புக்கூடு என்ற பெயர் பெற்றது. இதனுடன் நிறையப் புதைபடிமங்கள், டைனோசர்கள் மற்றும் 1784-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட விண்கல் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதில் பெரும்பாலானவை தீயில் எரிந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!