வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (03/09/2018)

கடைசி தொடர்பு:12:58 (03/09/2018)

``என் தாயின் காதலன் என்னைப் பாலியல் வன்முறை செய்தான்!", ஆஸ்திரேலியச் சிறுமியின் துயரம்!

``எனக்கு அப்போது 12 வயது. கிறிஸின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கின. ஒரு நாள், நானும் அவனும் வீட்டில் தனியாக இருக்கும்போது, என்னைச் சமையலறைக்கு இழுத்துச் சென்றான்."

``என் தாயின் காதலன் என்னைப் பாலியல் வன்முறை செய்தான்!

லகம் முழுவதும் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் நடக்கும் பாலியல் கொடுமைகளும் வன்முறைகளும் விசித்திரமாகவும் மிகவும் கொடூரமாகவும் இருக்கின்றன. சென்னை அயனாவரம் முதல் ஆஸ்திரேலியா வரை இதே கதைதான். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மீகன் ஸ்டெவன்சன் தன் வாழ்க்கையில் நடந்த பாலியல் வன்முறையையும் அதிலிருந்து தான் மீண்ட அனுபவத்தையும், ஓர் ஆஸ்திரேலிய செய்தி வலைதளத்தில் மிகவும் உருக்கமாக எழுதியிருந்தார். அந்தப் பதிவிலிருந்து..

``சூரியன் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது. நான் சிரித்துக்கொண்டே அந்த ஊஞ்சலை நோக்கி ஓடினேன். நான் என் அம்மா லேனனுடன் அந்தப் பூங்காவுக்குச் சென்றிருந்தேன். அம்மாவின் காதலர் கிறிஸ்டோபரை பார்க்க! 

என் அம்மா தன் காதலருடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். எனக்கு ஏழு வயதாகும்போது, என் அம்மாவும் கிறிஸ்டோபரும் ஒரு கிளப்பில் சந்தித்துக்கொண்டனர்.

பாலியல் வன்முறை

PC: nowtolove.com.au

வெகுவிரைவிலேயே, அவர் எங்கள் வீட்டில் தங்க ஆரம்பித்துவிட்டார். நானும் அவரை அப்பாவென்று அழைத்தேன். என்னுடைய அப்பா நான் சிறுவயதில் இருக்கும்போதே எங்களை விட்டுச் சென்றார். அதனால், என் அம்மா சந்தோஷமாக இருப்பதை விரும்பினேன்.

இரண்டு வருடங்கள் கழித்து, என் அம்மா மற்றும் கிறிஸ் திருமணத்தின் தலைமைப் பெண் தோழியாக இருந்தேன். நான் வெள்ளை நிற ஸ்லீவ்லஸ் ஆடையும், அதற்குப் பொருத்தமான தலை அலங்காரமும் அணிந்திருந்தேன். சில  வருட காலம், கிறிஸ் என்னை தன் சொந்த மகளாகவே நடத்தினார்.

ஒரு முறை காதலர்கள் தினத்தன்று, எனக்கும் என் அம்மாவுக்கும் ஆளுக்கொரு பூ பொக்கே பரிசளித்தார். இது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக இருந்தது. ஆனால், எனக்கு அவர் பூக்கள் கொடுத்ததைப் பார்த்து அம்மாவின் முகம் வாடியது. அவர் பொறாமைப்படுகிறார் என்று நான் நினைத்தேன். 

எனக்கு அப்போது 12 வயது. கிறிஸின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கின. ஒரு நாள், நானும் அவனும் வீட்டில் தனியாக இருக்கும்போது, என்னைச் சமையலறைக்கு இழுத்துச் சென்றான். ``இந்த ஜீன்ஸ் உடையில் நீ மிகவும் கவர்ச்சியாக இருக்கிறாய்”, என்று ரகசியமாகக் கூறினார், என் கால்களைத் தொட்டவாறே. நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

``நாம் தனியாக இருக்கும்போது, நீ என்னை கிறிஸ் என்றே அழைக்கலாம்”, என்று அவர் கூறினார்.

நான் பதற்றத்துடன் தலையசைத்தேன். 

அன்றிலிருந்து, எனக்கு அவர் நிறைய பரிசுகள் அளித்தார், ஒரு பண்டோரா ப்ரஸ்லேட் உட்பட!

``அவர் எனக்கு எதுவுமே வாங்கித்தருவதில்லை”, என என் அம்மா விரக்தியில் கூறினார்.

ஒவ்வொரு வார இறுதி நாள்களிலும், நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து திரைப்படங்கள் பார்ப்போம்.’ ஆனால், ஒரு நாள், என் அம்மா மேல்மாடியில் இருக்க, கிறிஸ் என்னிடம் மிக மோசமாக நடந்துகொண்டார்.  

``இல்லை..” என்றபடியே நான் சுதாரித்துக்கொண்டு, அவரைத் தள்ளிவிட்டேன். 

அதற்கு அடுத்த வாரம் வரை, அவர் என்னிடம் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. என் அம்மாவுக்கும் கிறிஸுக்குமான சண்டை பெரிதானது. தொடர்ந்து விவாதித்துக்கொண்டே இருந்தனர். 

ஒரு நாள், ``உன் அம்மாவுக்கு உன் மீது அக்கறை இல்லை; அவளுக்கு நீ தேவையில்லை என்று நினைக்கிறாள்!”, என்று அவர் கூறினார். 

``நீங்கள் பொய் சொல்கிறீர்கள்”, என்றேன். ஆனால், எனக்கும் சந்தேகங்கள் எழுந்தன.

அதற்கு அடுத்தடுத்த வாரங்களில், அம்மா மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார். 

ஒரு நாள், நான் வீடு திரும்பும்போது, அம்மா வீட்டில் இல்லை..``அவள் வீட்டை விட்டு வெளியில் போய் விட்டாள். இனி, நாம் மட்டும்தான்  இங்கு, மெக்கி!”, என்றார் கிறிஸ்! 

நான் அதிர்ச்சியடைந்தேன். அதே நேரம் வீடு அமைதியாக இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டேன்.

இரண்டு வாரங்கள் கழித்து, நாங்கள் வீட்டில் இருந்தபோது, அவர் எனக்கு கோலா குளிர்பானத்தைக் குடிக்கக் கொடுத்தார். 

``அதில் வோட்கா கலந்திருக்கிறது”, என்று கூறி புன்னகைத்தார்.

நான் குடிக்க விரும்பவில்லை. அதே நேரம், அவருக்கு ஏமாற்றத்தைக் கொடுக்க விரும்பவில்லை. அதனால் குடித்தேன். சில நிமிடங்கள் கழித்து, எனக்குத் தலைச்சுற்றியது.
திடீரென, அவர் என் மீது பாய்ந்தார். அவரைத் தள்ளிவிட முயன்றேன். ஆனால், அவர் மிகவும் வேகமாக என்னைத் தள்ளினார். என் ஆடைகளைக் களைத்தார். யாரை நான் அப்பா என்று அழைத்தேனோ, அவரே என்னைப் பாலியல் வன்முறை செய்ய, என் உடல் முழுவதும் மிகுந்த வலி பரவ ஆரம்பித்தது. அப்போது எனக்கு வெறும் 13 வயது.

மறுநாள், எனக்குக் குமிட்டிக்கொண்டிருந்தது. 

``கிறிஸ், நேற்று இரவு..”, என நான் முணுமுணுக்க..

``யாரும் உன்னை நம்ப மாட்டார்கள். நீ அமைதியாக இருப்பதுதான் நல்லது”, என்றார்.

நானும் அது சரி என்று நினைத்தேன்.

அதற்கு அடுத்த வாரம், கிறிஸ் எனக்கு மற்றொரு பானம் கொடுத்தார். நானும் குடித்தேன். அன்று என்ன நடந்தது என்றே நினைவில்லை. என் அந்தரங்க உறுப்புகள் புண்பட்டிருந்தது. என் ஆடையில் ரத்தக் கறைகள் இருந்தன. 

ஒருநாள், அவர்தான் சட்டப்படி என்னுடைய காப்பாளர் என்று கூறினார். அவர் என்னை என்ன செய்வாரோ என்று மிகவும் பயந்தேன். நான் என் நண்பர்களை வீட்டுக்கு அழைந்துவந்தால், அவர்களை பயமுறுத்தினார். நான் மிகவும் தனிமைப்பட்டிருந்தேன்.

பாலியல் வன்முறை

ஒரு நாள், அவர் என்னிடம், ``எனக்குப் புற்றுநோய் இருந்தது. சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இப்போது மறுபடியும் வந்திருத்திருக்கிறது. நான் இறந்துகொண்டிருக்கிறேன்!”, என்றார். முதலில், அவருக்குப் புற்றுநோய் இருக்கிறது என்ற விஷயமே எனக்குத் தெரியாது.

நான் அழுதேன். அவர் என்னை அணைத்துக்கொண்டார்.  

சில மாதங்கள் கழிந்தன. ``நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்!”, ஒவ்வொரு மாலையும் இதே வார்த்தைகளைக் கூறினார். ஆனால், நான்  பார்க்காத சமயம், அவர் மிக உற்சாகமாக இருந்தார்.

வீட்டு வேலை அனைத்தையும் நானே செய்தேன். இதற்கிடையே, அவர் எனக்குக் தொடர்ந்து பாலியல் கொடுமைகள் செய்துகொண்டே இருந்தார். அவர் என்னைத் தன் மனைவியாக்கிக்கொள்ளவே நினைக்கிறார் என்று தோன்றியது. 

அப்போது ஒரு நாள், திடீரென போலீஸார் எங்கள் வீட்டுக்கு வந்து, கிறிஸைக் கைது செய்தனர்.

நான் என் நிஜ அப்பா மற்றும் அவரின் மனைவி ஹெலன் வீட்டில் தங்கினேன். கிறிஸூக்குப்  பாலியல் வன்முறை செய்த குற்றத்துக்காக 16 மாதங்கள் தண்டனை கிடைத்தது. எனக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால், எனக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடுமையிலிருந்து என்னால் மீள முடியவில்லை. என் கண் முன் அது அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தது. தூக்கமின்மையால் அவதிப்பட்டேன். மனிதர்களை நம்பவே மனம் மறுத்தது.

ஒருமுறை, என் அப்பாவிடம் நடந்தவற்றைக் கூறினேன். அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டது. என்  அம்மாவிடமும் நடந்தவற்றை அப்படியே கூறினேன்.

இறுதியில், 46 வயதான கிறிஸ்டோபர் பால் சார்ல்டன் என்ற கிறிஸ், பாலியல் வன்முறை குற்றத்துக்காகவும், ஒரு சிறுமியைத் தொடர்ந்து பாலிய வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதற்காகவும், அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. அவருக்குப் புற்றுநோய் இருக்கிறது என்று கூறியதெல்லாம் வெறும் பொய். என் அம்மா கண்ணீரில் வெடித்து அழுதார்.

என் அம்மாவையும் என்னையும் அவர் வேண்டுமென்றே பிரித்தார். ஆனால், நாங்கள் இப்போது முன்பைவிட மிகவும் அன்போடு இருக்கிறோம். இனி நிச்சயம் அவர் எங்களுக்குள் வர வாய்ப்பில்லை என்ற உறுதியுடன்!"

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்