உலகப் புகழ்பெற்ற 12,000 ஆண்டுகள் பழைமையான லூசியாவின் மண்டை ஓடு எரிந்து நாசம்!

ரியோடி ஜெனிராவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய அருங்காட்சியகத்தில் ஞாயிறன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் 200-ம் ஆண்டு விழா கொண்டாடிய நிலையில் இந்தப் பிரேசில் அருங்காட்சியகம் தீ விபத்தில் முற்றிலும் அழிந்தே போனது.  20 லட்சம் தொல்பொருள்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

பிரேசில் தீ விபத்தில் மண்டை ஓடு எரிந்து நாசம்

அவற்றில் லூசியா என்ற பெண் மண்டை ஓடு உலகப் புகழ்பெற்றது. லூசியா பிரேசிலில் தோன்றிய முதல் மனித இனம் என்று சொல்லப்படுகிறது. லூசியாவின்  மண்டை ஓடு 12,000 ஆண்டுகள் பழைமையானதாக கருதப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் விலை மதிப்பில்லாத இந்த மண்டை ஓடும் எரிந்து நாசமானது. 1970-ம் ஆண்டு மெனாஸ் ஜெராசிஸ் நகரம் அருகே கண்டெடுக்கப்பட்ட இதுதான் பிரேசில் நாட்டில் கிடைத்த முதல் பழைமையான மண்டை ஓடு. இந்த மண்டை ஓட்டை வைத்து மான்செஸ்டரில் உள்ள பிரிட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் லூசியாவின் முகத்தை வடிமைத்திருந்தனர். அருங்காட்சியத்துக்கு வரும் பார்வையாளர்களுக்கு லூசியாவின் மண்டை ஓடு வியப்பை அளிக்கும் விஷயமாக இருந்தது. 

தென்அமெரிக்காவின் மிகப் பழைமையான இந்த அருங்காட்சியகத்தில் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகப் பல ஆண்டுகளாக நிபுணர்கள் எச்சரித்து வந்தனர். எனினும் பிரேசில் அரசு கண்டுகொள்ளவில்லை. அருங்காட்சியகம் செயல்பட்டு வந்த கட்டடத்தை பராமரிக்க போதுமான நிதியை பிரேசில் அரசு ஒதுக்கவில்லை. கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது  தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்படவில்லை. தண்ணீர் இல்லாமல் தீயை அணைக்க வந்ததாகவும் ஏணிகூட அவர்களிடத்தில் இல்லை என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பொதுமக்களும் ராணுவ வீரர்களும் கட்டடத்துக்குள் சென்று தங்களால் முடிந்தவரை தொல்பொருள்களை வெளியே எடுத்து வந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!