25 ஆண்டுகளில் மிக வலுவான சூறாவளி... ஒரே நாளில் நிர்மூலமான மேற்கு ஜப்பான்! #TyphoonJebi

மிக வலிமையான சூறாவளியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது ஜப்பான்.

25 ஆண்டுகளில் மிக வலுவான சூறாவளி... ஒரே நாளில் நிர்மூலமான மேற்கு ஜப்பான்! #TyphoonJebi

11 பேர் உயிரிழப்பு, 200-க்கும் அதிகமானோர் காயம், 16 இலட்சம் வீடுகளில் மின்தடை, 100 கார்களில் நெருப்பு, 2000 ட்ராஃபிக் சிக்னல் செயலிழப்பு, 10 இலட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற அறிவுறுத்தல். இவையெல்லாம் ஜப்பானில் ஏற்பட்ட சூறாவளியால் ஒரே நாளில் நிகழ்ந்த இழப்புகள். செப்டம்பர் 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை ஜெபி சூறாவளி (Typhoon Jebi) மேற்கு ஜப்பான் பகுதியைத் தாக்கியது. மிக வலுவான சூறாவளியான ஜெபி அதிகமான வெள்ளப் பாதிப்பு, மழை, நிலநடுக்கம் ஆகியவற்றை ஒரே நாளில் ஏற்படுத்தியது. 

ஜப்பான் ஜெபி சூறாவளி

செவ்வாய்க்கிழமை அன்று மிக வேகமாக வீசிய சூறாவளியின் காரணமாகச் சாலையில் வந்துகொண்டிருந்த லாரிகள், பேருந்துகள் என எல்லா வாகனங்களும் கவிழ்ந்து உருண்டோட ஆரம்பித்தன. சில வாகனங்கள் தீப்பிடித்ததில் நெருப்பு பல இடங்களுக்கும் பரவியது. சிலருக்கு நடப்பது என்னவென்று புரிவதற்குள் அவர்களையே தூக்கிச் சென்றிருந்தது சூறாவளி ஜெபி. கட்டடங்களின் கூரைகள், அறிவிப்பு பலகைகள் எனச் சாலையில் இருந்த எதுவும் மிஞ்சவில்லை. சூறாவளி எல்லாவற்றையும் கபளீகரம் செய்து தனது பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது. கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் அலைகள் சாலைக்கு வந்துவிட்டன. வெள்ள பாதிப்பு ஒரே நாளில் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. இடைவிடாமல் கன மழை கொட்டித் தீர்த்தது. இவையெல்லாம் சேர்ந்து மேற்கு ஜப்பானை பயங்கரமாகத் தாக்கின. சூறாவளி ஜெபி க்யோட்டோ ( Kyoto), ஷிகோகு (Shikoku), ஒசாகா (Osaka) வழியாகப் பயணித்து வடக்கு மற்றும் வடகிழக்காக ஜப்பான் கடலை (The Sea of Japan) நோக்கிப் பயணிக்கின்றது. ஜெபி என்பதற்குக் கொரியாவில் விழுங்கிக் கொள்வது என்று பொருள். பெயருக்கேற்றாற்போல் ஜப்பானின் பெரும்பகுதியை விழுங்கிவிட்டது.

சூறாவளியால் சேதமடைந்து நிற்கும் கப்பல்

ஜப்பானில் இயற்கைச் சீற்றங்கள் நடைபெறுவது என்பது வாடிக்கையான விஷயம்தான். அவற்றையெல்லாம் சமாளிக்கும் விதமாகவே அந்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் சூறாவளி என்பது ஜப்பான் வரலாற்றில் மிகக் கொடூரமான இயற்கைச் சீற்றமாகும். இது மேற்கு ஜப்பான் முழுவதையும் நிர்மூலமாக்கிவிட்டது. கடந்த 25 ஆண்டுகளில் இப்படி ஒரு சூறாவளி ஜப்பானில் ஏற்பட்டதில்லை. கடைசியாக 1993-ம் ஆண்டு இதேபோன்ற ஒரு சூறாவளி ஜப்பானைத் தாக்கியது. அதைவிட இப்போது ஏற்பட்ட சூறாவளி நிறைய இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் உச்சமாக ஒசாகா விரிகுடாவில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹௌன்மரு (Houunmaru) எண்ணெய்க் கப்பல் சூறாவளியால் துக்கி வீசப்பட்டுள்ளது. இதனால் ஒசாகா விரிகுடாவில் கட்டப்பட்டிருந்த பாலம் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளது. ஒசாகா விரிகுடா கடலில் உள்ள கான்சாய் சர்வதேச விமான நிலையத்துக்கும் (Kansai International Airport ) ஒசாகா மாகாணத்துக்கும் இந்தப் பாலம்தான் ஒரே வழி. இதனால் விமான நிலையத்தில் இருப்பவர்கள் வெளியே வர முடியாமல், தனித்துவிடப்பட்டுள்ளனர். கான்சாய் விமானநிலையம் அமைந்திருக்கும் செயற்கைத்தீவில் 5000-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளனர். அவற்றில் பயணிகள் மட்டும் 3000 பேர். அவர்கள் அனைவரும் விமான நிலையத்திலேயே தங்கியுள்ளனர். மின்சாரம், குடிநீர் என எதுவுமில்லாமல் ஒருநாள் விமானநிலையத்தில் இருந்தவர்களைப் புதன்கிழமை காலையில் மின்விசைப் படகுகள் மூலம் கடல்வழியாக மீட்டு கோபே (Kobe) நகருக்கு அழைத்து வந்துள்ளனர். 

ஹௌன்மரு எண்ணெய் கப்பல் 2591 டன் எடையும் 89 மீட்டர் நீளமும் உடையது. பாலத்திலிருந்து 400 மீட்டர் தூரத்தில்தான் கப்பலை நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். ஆனால் சூறாவளியின் வேகம் தூரத்தையும் நங்கூரத்தையும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது. ஹௌன்மரு கப்பலின் பணியாளர்கள் 11 பேர் அக்கப்பலுக்குள்ளேயே இருந்துள்ளனர். நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அவர்கள் அனைவரையும் மீட்டுள்ளனர். ஆரம்பத்தில் மணிக்கு 80 கிமீ வேகத்தில் வீசிய ஜெபி சூறாவளி அதிகபட்சமாக 216 கிமீ வரை வீசியுள்ளது என ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. முன்னதாகவே கனமழை, புயல் போன்றவை ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் Jebi Typhoon

சூறாவளி மட்டுமல்லாமல் இடைவிடாத கனமழை வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. க்யோட்டோ நகரின் ஒரு பகுதியில் ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 24 மணி நேரத்துக்குள் மேற்கு ஜப்பான் பகுதியில் 500 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் 600-க்கும் அதிகமான விமானச் சேவை, டோக்கியோ - ஹிரோஷிமா வரை இயங்கும் அதிவேக புல்லட் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சூறாவளி அடங்கியபின்தான் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தெரிய வரும்.

ஜப்பான் நாடு தீவுகள் ஒன்றொடொன்று இணைந்து இருப்பது போன்ற நில அமைப்பைக் கொண்டவை. புவியியல்ரீதியாக அங்கு அடிக்கடி இயற்கைச் சீற்றங்கள் நிகழ்ந்தாலும் தற்போது ஏற்பட்டிருப்பது வரலாறு காணாத இயற்கைப் பேரிடர். பேரிடர்களை எதிர்கொண்டு நிற்கும் எந்தவொரு தேசத்துக்கும் தன் வரலாறின் மூலம் நம்பிக்கையளிப்பது ஜப்பான்தான். இந்த முறையும் முழுமையாக மீண்டெழும் என நம்புவோம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!