`ஜவஹர்லால் நேருவின் பல் மருத்துவரின் மகன்’ - பாகிஸ்தான் புதிய அதிபரின் இந்தியப் பின்னணி!

பாகிஸ்தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரிஃப் ஆல்வி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பல் மருத்துவர் ஹபீப் உர் ரஹ்மான் இலாஹி அல்வியின் மகன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

பாகிஸ்தான் 13-வது அதிபர் ஆரிஃப் ஆல்வி

பாகிஸ்தானில் அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் இம்ரான் கான் கட்சி சார்பில் ஆரிஃப் ஆல்வி போட்டியிட்டார். பஞ்சாப், சிந்து, ஹைபர், பலுசிஸ்தான் உள்ளிட்ட நான்கு மாகாணங்களின் சட்டசபைகளிலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் பதிவான 1,100 வாக்குகளில் 353 வாக்குகள் பெற்று ஆரிஃப் ஆல்வி வெற்றிபெற்றார். இதையடுத்து, பாகிஸ்தானில் 13-வது அதிபராக, வரும் 9-ம் தேதி பதவியேற்கிறார் ஆரிஃப் ஆல்வி. இந்நிலையில், இவரைப்பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 

இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில், ஆரிஃப் ஆல்வி குறித்து இடம்பெற்றுள்ள சுயவிவரக் குறிப்பில், `இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு ஆரிஃப் ஆல்வியின் தந்தை ஹபிப் உர் ரெஹ்மான் எலாஹி ஆல்வி, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பல் மருத்துவராக இருந்துள்ளார். ஹபீபுக்கு நேரு எழுதிய கடிதங்கள், அவரது குடும்பத்தினரிடம் இருக்கின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்பு, அவர் தனது குடும்பத்தினருடன் பாகிஸ்தானில் குடியேறிவிட்டார். கராச்சியில், கடந்த 1949 ஆம் ஆண்டு ஆரிஃப் ஆல்வி பிறந்திருக்கிறார். பல் மருத்துவரான இவர், சிறுவயதில் இருந்தே பல போராட்டங்களில் கலந்துகொண்டு, அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். பல் மருத்துவத் துறையில் சிறந்த நிபுணராகத் தன்னை அடையாளப்படுத்தியதுடன், அரசியலிலும் கவனம் செலுத்தியிருக்கிறார். இம்ரான் கானுடன் இணைந்து பி.டி.ஐ கட்சியைத் தொடங்கியவர்களுள் ஆரிஃப் ஆல்வி முக்கியமானவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!