`அவுங்க செய்தது தவறுதான்; அதுக்காக பிரம்படியா?' - ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு குரல்கொடுத்த மலேசியப் பிரதமர்

மலேசியாவில் ஓரினச் சேர்கையாளர்களான இரண்டு பெண்களுக்குப் பொது இடத்திலேயே வைத்து பிரம்படி கொடுத்ததை மலேசிய பிரதமர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

பிரம்படி
 

மலேசியாவில் தெரங்கனு மாகாணத்தில், கடந்த மாதம் பொது இடத்தில் காரில் நெருக்கமாக இருந்ததாகக் கூறி இரண்டு பெண்களை மலேசிய காவல்துறை கைது செய்தது. அவர்கள் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த திங்கட்கிழமை (செப். 2) இரண்டு பெண்களும் தெரங்கனு ஷரியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். (ஷரியா நீதிமன்றம் என்பது இஸ்லாமியப் பெண்களுக்கு என்று தனியாக, ஷரியா சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் நீதிமன்றம் ஆகும்) அங்கு அவர்கள் இருவருக்கும் தண்டனையாக பொது இடத்தில் வைத்து ஆறு பிரம்படிகள் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து தண்டனை நிறைவேற்றப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த அந்த இடத்தில், இரண்டு பெண்களுக்கும் தலா ஆறு பிரம்படிகள் வழங்கப்பட்டன. இருவரும் கதறி அழுதனர். இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பரவியது. இந்தச் சம்பவம் மலேசியா மட்டுமின்றி சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மனித உரிமைகள் அமைப்பும், எல்.ஜி.பி.டி சமூகத்துக்கு ஆதரவான அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இந்த நிலையில், இந்தச் சம்பவம் மலேசிய பிரதமர் மகாதிர் பின் முகமதின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. `பொது இடத்தில் வைத்து பெண்களுக்கு பிரம்படி கொடுத்தது மிகவும் தவறு’ என்று  மகாதிர் பின் முகமது வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், ‘அந்த இரண்டு பெண்களுக்கும் பொது இடத்தில் வைத்து பிரம்படி கொடுத்திருக்கக் கூடாது. இது கருணை, இரக்கம் இல்லாத செயல். அவர்கள் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை. எனவே, அவர்களுக்கு பொறுமையாக எடுத்துச் சொல்லி ஆலோசனை வழங்கி இருக்கலாம். இந்தத் தண்டனையை நிறைவேற்றியவர்கள் தங்கள் மதத்தின் பெருமையையும் பாழாக்குகின்றனர்’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

இன்னொரு புறம் தண்டனை நிறைவேற்றியவர்கள் தரப்பில் கூறுகையில், `அந்தப் பெண்களைக் காயப்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை. அவர்களுக்குப் பாடம் கற்பிக்கவே இப்படிச் செய்தோம்’ என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!