`இனி எந்த நாட்டுடனும் நாங்கள் போரிடமாட்டோம்' - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டம்

பாகிஸ்தான், இனி வரும் காலங்களில் பிற நாடுகளுடன் போரிடாது எனத் தெரிவித்திருக்கிறார் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான். 

பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்ற நாள்முதலே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டை மீட்டெடுப்பதற்காக ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதி, முதலமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் முதல் வகுப்பு விமானத்தில் பணிக்கத் தடை விதித்தார். அதோடு, பிரதமர் பயன்படுத்தும் சொகுசு கார்களை ஏலம் விடுவதற்கும் முடிவு செய்து, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இதற்கிடையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவ பாகிஸ்தான் தயார் என அறிவித்தார். இந்த அறிவிப்பு பலரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

இப்படியான நிலையில், பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின விழாவில் பங்கேற்று பேசிய இம்ரான் கான், `வேறு எந்த நாடுகளும் பாகிஸ்தான் ராணுவம் போன்று பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடியதில்லை. இந்தப் போரில், 70,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மனித உயிர் இழப்புகளைக் காட்டிலும், பொருளாதாரத்தில் பாகிஸ்தான் சந்தித்த இழப்புகள் அதிகமாக உள்ளது. பாகிஸ்தானில் தேவையான அனைத்து வளங்களும் உள்ளன. சிறந்த கனிம வளங்கள் நிறைந்த நாடாகப் பாகிஸ்தான் இருக்கின்றது. நான்கு காலநிலை பருவங்களை வைத்துள்ளோம். ஆகையால், இதைப் பயன்படுத்தி சிறப்பாகவும் நேர்மையாகவும் செயல்படுவோம். மருத்துவமனை, கல்வி உள்ளிட்ட துறைகளில் அதிக முதலீடு செய்யப்படும். பாகிஸ்தான் ராணுவம் ஓர் அமைப்பு மட்டுமே. இனி வரும் காலங்களில், பிற நாடுகளுடன் பாகிஸ்தான் ராணுவம் போர் என்ற நிலைப்பாட்டைக் கையில் எடுக்காது. ஆரம்பம் முதலே இத்தகைய நிலைப்பாட்டை நான் எடுத்திருக்கிறேன்' என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!