தும்பிக்கையை இழந்து வாழ்வுக்காகப் போராடும் குட்டி யானை... மனதை உருக்கும் வீடியோ காட்சி!

தும்பிக்கையை இழந்த நிலையில் தென்னாப்பிரிக்க பூங்காவில் ஓரு குட்டி யானை உயிருக்குப் போராடிவருகிறது. 

யானை

யானை என்றவுடன் அனைவரின் நினைவுக்கும் வருவது அதன் மிகப்பெரிய தோற்றம், குண்டான கால்கள், பெரிய காது, தந்தம் மற்றும் தும்பிக்கை. மற்ற எந்த விலங்குகளுக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பாக யானைக்கு மட்டுமே தும்பிக்கை உள்ளது. சுவாசிக்க, உணவு உண்ண, நீர் அருந்த, மோப்ப சக்தி போன்ற அனைத்துக்கும் தும்பிக்கையைத்தான் பயன்படுகிறது. யானை தன் தும்பிக்கையை இழந்தால் அதனால் உயிர்வாழ்வது சிரமம். 

தென்னாப்பிரிக்காவில் உள்ள குரூகர் தேசிய பூங்காவில், பிறந்து சில மாதங்களே ஆன குட்டி யானையைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறந்து சில மாதங்களே ஆன ஒரு குட்டி யானை தன் தும்பிக்கையை இழந்து தவித்துவருகிறது. குட்டி யானை எப்படி தன் தும்பிக்கையை இழந்தது என சரியாகத் தெரியவில்லை என்று பூங்காவின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், பூங்காவில் உள்ள குட்டைகளில் தண்ணீர் அருந்தும்போது அங்குள்ள முதலை குட்டி யானையின் தும்பிக்கையைக் கடித்திருக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

தற்போது, அந்தக் குட்டி யானை சுவாசிக்க முடியாமலும், உணவருந்த முடியாமலும் மிகவும் சிரமப்பட்டுவருகிறது. யானையைப் பரிசோதித்த ஆராய்ச்சியாளர்கள் குட்டி யானையால் இன்னும் சிறிது காலத்துக்கே உயிர்வாழ முடியும் எனத் தெரிவித்துள்ளனர். தும்பிக்கையில்லாமல் அந்த குட்டி யானை பூங்காவில் உலாவரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அனைவர் மனதையும் கலங்கடித்துள்ளது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!