சுறுசுறுப்பானவர்கள் ஆண்களா? பெண்களா? - உலக சுகாதார அமைப்பின் ஆய்வு அறிக்கை

உலகில் அதிக சுறுசுறுப்பான மக்கள் வசிக்கும் நாடுகள் பற்றிய ஆய்வு அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. 

சுறுசுறுப்பு

உலகிலேயே அதிக சுறுசுறுப்பான மக்களைக் கொண்ட நாடுகள் குறித்து உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. 169 நாடுகளில் வாழும் மக்கள் தாங்கள் செய்யும் அன்றாட செயல்களை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவு தி லான்சட் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வு குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள முடிவில், உலகிலேயே கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள உகாண்டா மக்கள் தான் அதிக சுறுசுறுப்பானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் காலையில் எழும் நேரம், உடற்பயிற்சி, உணவு முறைகள் மற்றும் இரவு தூங்கும் நேரம், வேலை செய்யும் நேரம் ஆகியவை சீராக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடைசி இடத்தில் வளைகுடா நாடான குவைத் உள்ளது என்றும் இங்குள்ள மக்களில் 67 சதவிகிதம் பேர் போதுமான உடற்பயிற்சி இல்லாமல் சுறுசுறுப்பற்றவர்களாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

இந்தப் பட்டியலில் இந்தியா 117-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் 34 சதவிகிதம் அதாவது 30 கோடி மக்களுக்குச் சுறுசுறுப்பு இல்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் மிகவும் முக்கியமாக ஆண்களை விட பெண்கள் தான் அதிக சுறுசுறுப்பற்றவர்களாக உள்ளனர் என்றும் 169 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 159 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் சுறுசுறுப்பு இல்லாதவர்களாக உள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது. குவைத் தவிர அமெரிக்கா சவூதி அரேபியா, ஈராக் போன்ற நாட்டு மக்களுக்கும் போதுமான சுறுசுறுப்பு இல்லை என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. போதுமான உடற்பயிற்சி செய்யாவிட்டால் அதிக நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!