வடகொரியா 4வது அணுஆயுத சோதனைக்கு தயாராகிறது: தென்கொரியா குற்றச்சாட்டு | North Korea preparing for fourth nuclear test, south Korea, America

வெளியிடப்பட்ட நேரம்: 16:08 (08/04/2013)

கடைசி தொடர்பு:16:08 (08/04/2013)

வடகொரியா 4வது அணுஆயுத சோதனைக்கு தயாராகிறது: தென்கொரியா குற்றச்சாட்டு

சியோல்: உலக நாடுகளின் கடும் கண்டனத்தையும் மீறி வட கொரியா நான்காவது அணு ஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா மற்றும் தென் கோரியாவுக்கு இடையே போர் பதற்றம் பல ஆண்டுகளாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வட கொரியா மூன்றாவது அணு ஆயுத சோதனையை மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது.

தென்கொரியா மற்றும் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம் என வட கொரியா அறிவித்தது. இதற்கான ஆயத்தப் பணியில் வட கொரியா ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் தென்கொரிய நகரங்களை நோக்கி ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் போர் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. போர் பதற்றத்தைத் தவிர்க்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்தநிலையில், "வடகொரியா நான்காவது அணு ஆயுத சோதனைக்குத் தயாராகி வருகிறது. வட கொரியாவின் அணு ஆயுத சோதனை களத்தில் ராணுவத்தினர் மற்றும் வாகனங்களின் இயக்கம் இதை உறுதிப்படுத்துகிறது என்று தென் கொரியாவின் உளவுத் துறை எச்சரித்துள்ளது. இது குறித்து உண்மை நிலையைத் தெரிவிக்கும்படி அந்நாட்டின் அமைச்சர் யோ கில் ஜோவுக்கு தென்கொரியாவின் நாடாளுமன்ற நிலைக்குழு உத்தரவிட்டது. அவரும், "அங்கு நிலவும் சூழ்நிலைகள் அணுஆயுத சோதனைக்கான அறிகுறிகளாகவே உள்ளது" என்று கூறியுள்ளார்.

இது குறித்து தென்கொரிய அதிகாரிகள் கூறுகையில், "வட கொரியா உண்மையில் அணு சோதனைக்குத் தயாராகிறதா அல்லது அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று இப்படி செய்கிறதா என்று தெரியவில்லை. உண்மையில் அவர்கள் சோதனை மேற்கொள்ள உள்ளனரா என்று தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்