`தமிழ் மிகவும் அழகான மொழி!’ - ஜனாதிபதி முன்னிலையில் தமிழில் பேசி அசத்திய செக் குடியரசு மாணவி

``தமிழ் கடினமான மொழிதான், ஆனால் மிகவும் அழகான மொழி'' என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் செக் குடியரசு மாணவி தமிழில் பேசி அசத்தியிருக்கிறார். 

தமிழில் பேசி அசத்திய செக் குடியரசு மாணவி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 8 நாள்கள் சுற்றுப்பயணமாக சைப்ரஸ், பல்கேரியா, செகோஸ்லாவாகியா ஆகிய 3 நாடுகளுக்குச் சென்றுள்ளார். பயணத்தின் ஒரு பகுதியாக செக் குடியரசின் தலைநகர் பிராகாவில் உள்ள சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் ராம்நாத் கோவிந்த். அவரது, முன்னிலையில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிமோனா ஷிசிலோவா என்ற மாணவி தமிழில் பேசி அசத்தி உள்ளார்.

``தமிழ் மொழி'' எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பேசத் தொடங்கிய மாணவி, ``இந்த பல்கலைக்கழகத்தில் நான் தமிழ் படிக்கிறேன். தமிழ் மிகவும் கஷ்டமான மொழி. ஆனால், மிகவும் அழகான மொழி. இந்த பல்கலைக்கழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் ஒருவர் பணிபுரிந்திருந்தார். தமிழைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற அவரது முயற்சியின் காரணமாகவே பல்கலைக்கழகத்தில் தமிழை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தனர். மற்ற மொழிகளில் இருந்து வித்தியாசமான மொழி தமிழ். அதனுடன், சமஸ்கிருத மொழியையும் படித்தேன். இந்திய சமூகத்தை பற்றி நிறையத் தகவல்களை கற்றுக்கொண்டேன். இரண்டு முறை இந்தியா சென்றுள்ளேன். இந்திய ஜனாதிபதி முன்னிலையில் தமிழ் மொழி பற்றின சிறப்பைச் சொல்வது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது'' என அழகுத் தமிழில் மாணவி பேசியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. 

அவரைத் தொடர்ந்து, சமஸ்கிருதத்திலும் மாணவர் ஒருவர் பேசினார். மாணவி தமிழில் பேசும் வீடியோ, குடியரசுத் தலைவர் மாளிகையில் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் `தமிழ் மிகவும் அழகான மொழி’ என்ற தலைப்போடு பகிரப்பட்டிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!