உள்நாட்டுப் போர், பொருளாதார நெருக்கடி - ஆட்சியைக் கலைத்தார் சூடான் அதிபர்!

சூடானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசைக் கலைப்பதாக அந்நாட்டு அதிபர் ஓமர் பல் பஷிர் அறிவித்துள்ளார். 

சூடான்

சூடான் நாட்டில், சில வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்றுவருகிறது. கிளர்ச்சிப் படைகளிடம் உள்ள கிராமங்களைக் கைப்பற்றுவதற்காக, அரசுப் படைகள் மற்றும் ஆதரவுப் படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றன. உள்நாட்டுப் போர் காரணமாக சூடானில் கடுமையான பணவீக்கம் நிலவுகிறது. சூடான் பவுண்டுகள் மதிப்பிழந்ததால், வங்கி அமைப்புகளுக்கு மாற்றாக அங்கு அமெரிக்க டாலருக்கான கறுப்பு சந்தை உருவானது. இதனால், அந்நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது.

இதனால் நிலைமை இன்னும் மோசமாகி, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களைக் கூட இறக்குமதிசெய்ய முடியாமல் அரசாங்கம் தடுமாறியது. மானியங்களை அரசு தடைசெய்ததால், ஜனவரி மாதம்முதல் ரொட்டிகளின் விலை இரண்டு மடங்கானது. இதன் காரணமாக, மக்கள் அமைதி இழந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். ஏடிஎம்-களில் பணம் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. ஏடிஎம்-களில் 500 சூடானிஸ் பவுண்ட்ஸ் மட்டுமே எடுக்க முடியும்.

மேலும், ஏறக்குறைய நாட்டில் உள்ள சரிபாதி ஜனத்தொகை போதுமான உணவின்றித் தவித்துவருவதாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இந்நிலையில், அதிபர் ஓமர் அல் பஷிர் தலைமையில் இன்று அவசர அவசரமாக மந்திரிசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலைகுறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பின்னர் சூடான் அரசாங்கம் கலைக்கப்படுவதாக அதிபர் பஷிர் அறிவிப்பு வெளியிட்டார். மந்திரிசபையின் எண்ணிக்கையும் 31-லிருந்து 21-ஆக குறைக்கப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!