வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (10/09/2018)

கடைசி தொடர்பு:13:05 (10/09/2018)

அக்டோபர் 19-ம் தேதி இந்தியர்களுக்கு ஐ.நா தரும் தீபாவளிப் பரிசு!

தீபாவளிப் பண்டிகையைக் கௌரவிக்கும் விதமாக, ஐ.நா சிறப்புத் தபால்தலை வெளியிட முடிவுசெய்துள்ளது.

தீபாவளி

தீபாவளிப் பண்டிகை இந்தியாவில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புராணக் கதைகளின்படி நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த இந்த நாளை, இந்துக்கள் தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர். இந்த நாளில், வீடுகளில் வண்ணமயமாக விளக்கேற்றி பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியர்கள்,  தீபாவளியை விமரிசையாகக் கொண்டாடிவருகின்றனர். இந்த வருடம் தீபாவளிப் பண்டிகை நவம்பர் மாதம் 6-ம் தேதி வருகிறது. இந்த நிலையில், தீபாவளிக்குப் பெருமைசேர்க்கும் வகையில், ஐ.நா சபை சிறப்புத் தபால்தலை வெளியிட முடிவுசெய்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தீபாவளிப் பண்டிகை இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பல்வேறு சமூகத்தினர் இந்த நாளை புதிய வருடம் பிறப்பதாகக் கருதுகின்றனர். இந்தப் பண்டிகையைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஐ.நா தபால் தலை பிரிவு, தீபாவளி சிறப்புத் தபால்தலையை வெளியிடுகிறது. இதற்காக, சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுசெய்து வருகிறது. அக்டோபர் மாதம் 19-ம் தேதி  தபால்தலை வெளியிடப்படும். இதில், அகல்விளக்கு ஒளிரும் படம் இடம்பெறும். தபால்தலையின் பின்புறம், தீபாவளி வாழ்த்துடன் ஒளிரும் ஐ.நா தலைமை அலுவலகக் கட்டடத்தின் படம் இடம்பெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.