தற்கொலை செய்துகொள்ளும் 100 பேரில் 17 பேர் இந்தியர்கள்! தற்கொலை தடுப்போம்! #WorldSuicidePreventionDay

நீங்கள் இந்த வரியை வாசித்து முடிக்கும் நேரத்துக்குள் இந்த உலகில் யாரேனும் ஒருவர் தற்கொலை செய்திருக்கக் கூடும் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு. ஒவ்வொரு நாற்பது விநாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார் என்றால் நம்ப முடிகிறதா. தற்கொலை மரணங்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிகமாக ஏற்படுகின்றன. உலகளவில் தற்கொலை செய்துகொள்ளும் 100 பேரில் 17 பேர் இந்தியர்கள் என்று அதிர்ச்சியூட்டுகின்றன ஆய்வுகள்!

தற்கொலை தடுப்போம் - WorldSuicidePreventionDay

கிழக்காசிய நாடுகளில் ஒரு லட்சம் பேரில் ஐந்துக்கும் குறைவானவர்களே தற்கொலை செய்து இறக்கிறார்கள்.  இந்தியா போன்ற வளரும் நாட்டில் இது மிகப்பெரிய அவலம் என்கிறார்கள் உலகளாவிய மானுடவியல் வல்லுநர்கள். 

தற்கொலையைத் தூண்டக் கூடியவை எவை என்பதற்கு உளவியல் நிபுணர்கள் நான்கு காரணங்களை முன்வைக்கிறார்கள். முதலாவது, பொதுநலம் சார்ந்த விஷயங்களுக்காகத் தற்கொலை செய்துகொள்வது. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்களின் போதும், அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க மறுக்கும்போதும் இதுபோன்ற தற்கொலைகள் நிகழ்கின்றன. 

பதற்றம்

இரண்டாவது, சமூகத்துடன் இணைந்து வாழமுடியாத நிலையில் நிகழும் தற்கொலைகள். இப்படி ஒரு முடிவைத் தேடுபவர்கள், பெரும்பாலும் தனிமையாக வாழ்பவர்களாக இருப்பார்கள். ஒருகட்டத்தில் அதீதத்  தனிமை உணர்வால் பாதிக்கப்படும் நேரத்தில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 

மூன்றாவது, தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் தோல்வி. தாங்கள் சாதிக்க விரும்பும் விஷயத்தில் வெற்றி பெற இயலாமல் தோல்வி அடையும்போது அதைச் சகித்துக்கொள்ள முடியாமல் தற்கொலை  செய்துகொள்கிறார்கள். தொழிலில் தோல்வி, தேர்வில் தேர்ச்சி பெற  முடியாமை, விவசாயம் பாதிக்கப்படுதல் போன்ற காரணங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 

கடைசியாக, மிகவும் கட்டுக்கோப்பான சமூகக் கட்டமைப்பில் வாழ்பவர்கள், அதன் நெருக்கடியைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தாங்கள் சுதந்திரமாக வாழ முடியாததை எண்ணி துயரம் அடைகிறார்கள். 

தற்கொலை

மேலே குறிப்பிட்டுள்ள எந்தக் காரணமாக இருந்தாலும் சரி, 'தற்கொலை நிகழ்வது கட்டுப்படுத்தப்பட வேண்டும்' என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் நோக்கமாக இருக்கிறது. இந்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ம் தேதி சர்வதேச தற்கொலை விழிப்பு உணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒருவருக்குத் தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் முதலில் அது குறித்து யாரிடமாவது பேச வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு தற்கொலை விழிப்பு உணர்வு தினத்துக்காக ``தற்கொலைகளைத் தடுக்க ஒன்றிணைவோம்” எனும் கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. 

ஏதோவொரு காரணத்தால் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக ஸ்னேகா தற்கொலைத் தடுப்பு மையத்தை 044-2464 0050, 044-2464 0060  என்ற எண்களில் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நேரடியாகச் சென்றும் ஆலோசனை பெறலாம். முகவரி: 11, பார்க் வியூ சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!