வெளியிடப்பட்ட நேரம்: 21:57 (10/09/2018)

கடைசி தொடர்பு:22:46 (10/09/2018)

`இளம் வயதில் டிஸ்னிலேண்ட் பூங்காவிலிருந்து வெளியேற்றப்பட்டேன்!’ - ஒபாமா பெர்சனல் ஷேரிங்ஸ்

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தனது கல்லூரி காலத்தில் உலகப் புகழ்பெற்ற டிஸ்னிலாண்ட் பூங்காவிலிருந்து தான் வெளியேற்றப்பட்டது தொடர்பான புதிய தகவல்களைத் தெரிவித்தார். 

ஒபாமா

அமெரிக்காவின் 44 வது அதிபராகப் பதவி வகித்தவர் பராக் ஒபாமா. அமெரிக்கா மட்டுமல்லாது உலக அரங்கில் அதிகம் கவனம்பெற்ற தலைவர்களில் ஒருவரான இவர், கலிபோர்னியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அந்த கூட்டத்தில் தனது இளமைக் கால நினைவுகளை அவர் பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், “நான் இரண்டு முறை டிஸ்னிலாண்ட் பொழுதுபோக்கு பூங்காவுக்குச் சென்றுள்ளேன். எனது 11 வயதில் அங்கு நான் முதல்முறையாகச் சென்றேன். கல்லூரியில் பயின்ற நாள்களில் அங்கு இரண்டாவது முறை செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கோண்டோலோஸ் என்னும் ரைடில் (Ride) (ரோப் கார் போன்றது) செல்லும்போது புகை பிடித்துக்கொண்டே நான் பயணித்தேன். நண்பர்கள் சிலரும் அப்போது புகை பிடித்தனர். இதைச் சொல்ல நான் வெட்கப்படுகிறேன். அதன்பின்னர், அங்கு இருந்த காவலர்கள் நாங்கள் விதிமுறைகளை மீறிவிட்டதாக எங்களை வெளியேற்றினர்” என்றார்.

ஒபாமாவின் இந்தப் பேச்சு வைரல் ஆகவே டிஸ்னி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் ஐகர், `வளாகத்தில் அவர் புகை பிடிக்க மாட்டார் என்றால், ஒபாமா மீண்டும் இங்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம்” எனத் தெரிவித்துள்ளார். ஒபாமா புகை பிடிப்பது தொடர்பாகப் பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வைரல் ஆகும். அவர் அமெரிக்க அதிபராக வெள்ளை மாளிகையில் இருக்கும்போது, வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரிடம், “கடந்த 6 வருடமாக நான் புகைபிடிக்கவில்லை. அதற்குக் காரணம் என் மனைவி மீதுகொண்ட பயம்தான்” என்று தெரிவித்தார். அது அப்போது வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.