`16 சுற்று வரை சென்ற வ.உ.சி விநாடி வினா!' - அசத்திய அமெரிக்கவாழ் தமிழர்கள்

'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் அமெரிக்கவாழ் தமிழர்கள். 'கடல் கடந்து சுதேசிக் கப்பலை ஓட்டிய வ.உ.சியின் பிறந்தநாளைக் கொண்டாடுவது உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமை' என நெகிழ்கின்றனர் விழாக் குழுவினர். 

அமெரிக்க வாழ் தமிழர்கள்

அமெரிக்காவின் முதல் மாநிலமான டெலவரில் நடந்த வ.உ.சி பிறந்நாள் விழா, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த விழாவில், சிறுவர்களுக்கு ஓவியப்போட்டியும் பெரியவர்களுக்கு பேச்சுப்போட்டியும் சிறுவர்கள் குழுக்களாக கலந்துகொண்ட விநாடி - வினா போட்டியும் நடைபெற்றது. குறிப்பாக, விநாடி - வினா போட்டியில் வ.உ.சி தொடர்பான கேள்விகளுக்கு குழந்தைகள் தொடர்ச்சியாகச் சரியான பதிலைத் தர, 5-வது சுற்றுடன் முடிய வேண்டிய போட்டியானது, 16 சுற்றுகள் வரை சென்றது. அமெரிக்காவில் இருந்தாலும், வ.உ.சி தொடர்பாக சிறுவர்கள் தெரிந்துவைத்துள்ளனர் என நடுவர்கள் நெகிழ்ந்தனர்.

ஓவியப்போட்டி

உலகத் தமிழ்க்கழகத்தின் மயிலாடுதுறை கிளைத்தலைவரான கோ.அரங்கநாதன், கெண்டக்கி மாகாண கவர்னர் விருது பெற்றவரும் வாஷிங்டனில் இயங்கி வரும் எனெர்ஜில் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் நிறுவனருமான மகேந்திரன் உள்ளிட்டோர், வ.உ.சி அடைந்த இன்னல்கள் குறித்து விரிவாகப் பேசினர். தூத்துக்குடியில் வாழும் வ.உ.சி-யின் உறவினரான முருகேசன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை விழாவில் ஒளிபரப்பினர். 'சுதந்திரப் போராட்ட தியாகி சிதம்பரனாரின் பிறந்தநாள் விழா கடல் கடந்து அமெரிக்காவிலும் கொண்டாடப்படுவது நிச்சயம் ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமைதான்' என்கின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!