மாடலிங் உலகில் புது விதி படைத்த மங்கை - தடைகளைத் தாண்டி தடம் பதித்த வின்னி ஹார்லோ!

மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய கனவு, உலகின் முன்னணி பெண்கள் ஆடை நிறுவனமான விக்டோரியாஸ் சீக்ரெட்டில் ஒருமுறையாவது அழகியாகத் தேர்வாக வேண்டும் என்பதுதான். 5 அடிக்கும் அதிகமான உயரம், ஹவர்க்ளாஸ் உடலமைப்பு, 18 நிரம்பிய வயது என அவர்களுக்கென்றே தனித்துவமான விதிமுறைகள் நிறைந்த கலர்ஃபுல் உலகம் அது. அதில், 'விட்டிலைகோ (Vitiligo)' எனும் நீண்டகால சரும நோயால் பாதிக்கப்பட்ட வின்னி ஹார்லோ, அத்தனை விதிமுறைகளையும் உடைத்து தன் முதல் தடத்தை பதிக்கப்போகிறார். விக்டோரியா, இதுபோன்று உள்ளவர்களை தேர்ந்தெடுத்து ஊக்குவிப்பது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வின்னி ஹார்லோ

1994-ம் ஆண்டு, ஜூலை 27-ம் தேதி கனடாவில் பிறந்த வின்னி, ஆரோக்கியமாகத்தான் இருந்தார். நான்கு வயதில், விட்டிலைகோ எனும் சரும நோயால் பாதிக்கப்பட்டார். நம் தோல்களின் நிறத்துக்கு காரணமாக இருக்கும் 'பிக்மென்ட்டின்' அளவு குறைவதால், சருமத்தின் நிறம் ஆங்காங்கே மாற்றம் பெறும் நிலை விட்டிலைகோ. இதனால் பாதிக்கப்பட்ட வின்னி, தன் மழலை மற்றும் பதின்பருவத்தை 'மாடு', 'வரிக்குதிரை' போன்ற விலங்குகளின் ஒப்பிடுதலோடுதான் நகர்த்தினார். சக மாணவர்களின் அளவற்ற கேலி, கிண்டல்கள் அவரைத் தற்கொலை முயற்சி வரையிலும் தள்ளியது. மனவலிமை அதிகம் கொண்ட வின்னி, எல்லா தடைகளையும் தகர்த்தி, ஒருகட்டத்தில் தன்னுள் மிகப் பெரிய ஆசையை விதைக்கவும் செய்தார். பல தோல்விகளையும் அவமானங்களையும் கடந்து, மாடலிங் துறையில் மின்ன ஆரம்பித்தார். அதே நேரத்தில், 'விட்டிலைகோ' பிரச்னையால் மன உளைச்சலுக்கு உண்டாகும் மக்களுக்கு ஆதரவாக ஆலோசனைகள் வழங்கி வந்தார். 

இந்நிலையில், விக்டோரியா சீக்ரெட்டின் 2018-ன் ராம்ப் ஷோவில் பூனை நடையிடை தற்போது தேர்வாகியுள்ளார். தனது நீண்ட நாள் கனவு நிஜமான சந்தோஷத்தில், அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு இன்ஸ்டாகிராமில் பிஸியாகியுள்ளார் வின்னி. குறைபாடற்ற உடலமைப்புதான் மாடலிங்குக்கு அவசியம் என்ற மாடலிங் உலகின் மீதான பொதுவான பார்வையை வின்னி மாற்றியிருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!