``திரும்பப் பழகலாம் வாங்க..!’’ ட்ரம்ப்புக்கு கிம் ஜாங் கடிதம்

``திரும்பப் பழகலாம் வாங்க..!’’ ட்ரம்ப்புக்கு கிம் ஜாங் கடிதம்

லகின் இரு துருவங்களாகத் திகழ்ந்த அமெரிக்காவும், வடகொரியாவும் அண்மைக்காலமாக நெருங்கி வந்துகொண்டிருக்கின்றன. இருநாடுகளின் தலைவர்களும் அமைதிப் பேச்சுவார்த்தையை ஏற்கெனவே தொடங்கியிருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் யுன் ஆகியோர், கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து கைகுலுக்கிக் கொண்டனர். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, கொரிய தீபகற்பத்தில் பதற்றம் குறையத் தொடங்கியது.

என்றாலும், இரு தலைவர்களின் அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று அமெரிக்கா கருதியது. கொரிய தீபகற்பத்தில் அணுஆயுதம் இல்லாத நிலையை ஏற்படுத்துவதில் போதிய அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதால், வட கொரியாவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ-வின் சுற்றுப்பயணத்தைத் தாமதப்படுத்துமாறு கடந்த மாதம் அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.

இந்தச் சூழலில் வடகொரிய அதிபர், தற்போது அமெரிக்க அதிபருக்கு எழுதியுள்ள கடிதம், மீண்டும் இரு தலைவர்களின் சந்திப்புக்கு வழிவகுத்துள்ளது. ட்ரம்ப் - கிம் ஜாங் விரைவில் சந்திப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. அதற்கான நடைமுறைகள் இப்போதே தொடங்கியிருப்பதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. ட்ரம்ப் - கிம் ஜாங் இடையேயான சந்திப்புக்கான பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தொடங்கியுள்ளதாக அதன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

டொனால்டு ட்ரம்ப் - கிம் ஜாங் உன் விரைவில் சந்திப்பு

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்புச் செயலாளர் சாரா சாண்டர்ஸ், ``கிம் ஜாங் யுன்-னிடமிருந்து அமெரிக்க அதிபருக்கு ஒரு கடிதம் வரப்பெற்றுள்ளது. அது மிகவும் ஊக்கமளிக்கக்கூடியதாகவும், முன்னேற்றத்தை நோக்கியதாகவும் உள்ளது. அந்தக் கடிதத்தை வெளியிடுவதற்கு வடகொரிய அதிபர் சம்மதிக்காதவரை, அதன் முழுவிவரங்களையும் வெளியிட இயலாது. அதிபர் ட்ரம்ப் உடனான அடுத்த சந்திப்புக்கு அனுமதி கோருவதே அந்தக் கடிதத்தின் முக்கிய நோக்கம். ஏற்கெனவே ட்ரம்ப் - கிம் ஜாங் சந்திப்பு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கி, அதற்கான ஒருங்கிணைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்மையில் வடகொரியாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் அணுஆயுதங்கள் இடம்பெறவில்லை. எனவே, அதிபர் ட்ரம்ப் தன் கொள்கைகளின் இதுவரை மிகப்பெரிய வெற்றியை எட்டியுள்ளார். அமெரிக்கா - வடகொரியா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதற்கான பல்வேறு சான்றுகள் உள்ளபோதிலும், கிம் ஜாங்கின் கடிதம் அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இன்னும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அகதிகள் மீண்டும் சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளனர். ஏவுகணைகள் அல்லது அணுஆயுதம் தொடர்பான எந்தவொரு பொருளும் சோதனை நடத்தப்படவில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பாக ட்ரம்ப் - கிம் ஜாங் சந்திப்பு உள்ளது. அந்த வகையில் வடகொரிய அதிபரின் கடிதம், சந்திப்பைத் தொடர்ந்து எழுந்துள்ள முன்னேற்றங்களின் தொடர்ச்சி" என்றார்.

மேலும், ``வெள்ளை மாளிகையைப் பொறுத்தவரை ட்ரம்ப் - கிம் ஜாங் சந்திப்பு நடைபெறவேண்டும் என்று விரும்புகிறது. இரு தலைவர்களுக்கும் இடையேயான உரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று, அதன் பலன்கள் கிடைக்க வேண்டும் என்பதே இரு நாட்டு அரசு மற்றும் மக்களின் விருப்பமாக உள்ளது. கொரிய தீபகற்பத்தில் அணுஆயுதம் இல்லாத சூழலை ஏற்படுத்துவதற்கான தொடர் உறுதியே அமெரிக்காவின் நோக்கம்" என்றார் சாண்டர்ஸ். 

எனவே, மீண்டும் ஒரு வரலாற்று நிகழ்வாக அமெரிக்கா - வடகொரியா அதிபர்களுக்கு இடையேயான சந்திப்பு நிகழும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்தச் சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எப்படியோ, உலகளவில் குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுவதுடன் யுத்தம் இல்லா பூமி வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!