கூகுள் எர்த் வரைபடத்தில் காணாமல்போன மலேசிய விமானம்?

2014 -ம் ஆண்டு மார்ச் மாதம் 8 தேதி, மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பெய்ஜிங்கிற்குச் சென்ற போயிங் 777 வகை விமானம் காணாமல்போனது. விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமானத்துக்கு என்ன நிகழ்ந்தது என்பதுகுறித்து இப்போது வரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்துவருகிறது. விமானத்தின் உடைந்த பாகங்கள் கிடைத்தன என்று அவ்வப்போது செய்திகள் வந்தாலும், அவை எதுவும் இப்போது வரை உறுதிசெய்யப்படவில்லை.  

செயற்கை கோள் படம்

இதற்கிடையில், விமானத்தின் பாகங்கள் கம்போடியாவின் தலைநகரான Phnom Penh நகரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் உயர்ந்த மலைக் காடுகளில் கிடப்பதாக, கடந்த 3-ம் தேதி பிரிட்டிஷ் தொழில்நுட்ப நிபுணர் இயன் வில்சன் 'டெய்லி ஸ்டார்' (DAILYSTAR ) என்கிற செய்தி நிறுவனத்துக்குத் தகவல் தெரிவித்தார். அதற்கு ஆதாரமாக,  கூகுள் செயற்கைக்கோள் வரைபடம் ஒன்றை வெளியிட்டார். அதில், விமானம் விழுந்துகிடப்பது தெளிவாகத் தெரிந்தது. செயற்கைக் கோள் வரைபடத்தில் இருக்கும் விமானத்தின் நீளம், 70 மீட்டர்கள் இருப்பதாகவும், காணாமல்போன மலேசியா விமானம் 63.9 மீட்டர் அளவுகொண்டது என்றும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்தனர். விமானத்தின் வால் பகுதி உடைந்து காணப்படுவதால், படத்தில் இருப்பது மலேசியா போயிங் விமானமாக இருக்கலாம் என நம்பப்பட்டது.

மலேசிய விமானம் என காட்டும் செயற்கை கோள் படம்

அதன்படி, வான்வழித் துறை ஆராய்ச்சியாளர்கள் கடந்த மூன்று நாள்களாக ஹெலிகாப்டர் உதவியுடன் வரைப்படம் காட்டிய இடத்தில் விமானத்தின் பாகங்கள் இருக்கிறதா என்பதைத் தேடிவருகின்றனர். இதைத் தொடர்ந்து, சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் வியூ என்கிற நிறுவனம் 'இயன் வில்சன்' குறிப்பிட்ட, கம்போடிய மலைப் பகுதிகளில் தன்னுடைய செயற்கைக்கோள் உதவியுடன் விமானத்தின் பாகங்கள் இருக்கிறதா எனத் தேடியது. தேடுதலின் கடைசியில் 2015, 2016, 2017 -ம் ஆண்டுகளின் செயற்கைக் கோள் வரைபடங்களைக்கொண்டு ஆராய்ந்து பார்த்ததில், குறிப்பிட்ட பகுதியில் எந்த விமானமும் இல்லை எனத் தெரிவித்தது. தொடர்ந்து தேடுதல் பணி நடைபெறுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!