விமானம் ஓட்டத் தயாராகும் சவுதி பெண்கள் - இளவரசரின் சீர்திருத்தங்களுக்குக் குவியும் பாராட்டுகள்!

சவுதியில், முதல் முறையாகத் துணை விமானியாகப் பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். அதேபோல, விமான சேவையாளர்களாகவும் பெண்களை நியமனம் செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது. 

அராப் பெண்கள்

சவுதி அரேபியாவில், பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பணிக்குச் செல்ல விண்ணப்பிப்பது முதல் கடினமான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுவருகிறது. சமீபத்தில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராகப் பொறுப்பேற்றுக்கொண்டார், மன்னர் சல்மானின் இளைய மகனான முகமது பின் சல்மான். இளவரசராகப் பதவியேற்ற பின், சீர்திருத்த நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டுவருகிறார். குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுத்துவருகிறார். அதன்படி, சமீபத்தில் பெண்களும் கார் ஓட்டலாம் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடந்த ஜூன் 24-ம் தேதி முதல் அமலுக்குவந்தது. 

இந்த நிலையில், சவுதி வரலாற்றில் முதல் முறையாகப் பெண்கள் துணை விமானியாகப் பணியமர்த்தப்பட உள்ளனர். ரியாத்தைச் சேர்ந்த ஃப்ளைநஸ் என்ற ஏர்லைன் நிறுவனம், முதல் முறையாகத்  துணை விமானி மற்றும்  விமான சேவையாளர்கள் பணிக்கு பெண்களை நியமனம் செய்வதற்காக,  சமீபத்தில் விளம்பர அறிவிப்பை வெளியிட்டது. இந்தப் பணிக்காக 1,000 பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். இதன்மூலம், விமான போக்குவரத்துத் துறையில் சவுதிப் பெண்கள் கால்பதிக்க உள்ளனர். சவுதி அரசின் நடவடிக்கைக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!