வீடுகளுக்குச் சென்ற கேஸ் குழாயில் வாயுக் கசிவு! போஸ்டன் நகரைப் பதறவைத்த தீ விபத்து

அமெரிக்காவில், வீடுகளுக்குச் செல்லும் இயற்கை எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் வாயு கசிந்து, பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

போஸ்டன் நகரில் தீ விபத்து

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் போஸ்டன் நகரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள லாரன்ஸ், அண்டோவர் மற்றும் வடக்கு அண்டோவர் ஆகிய நகரங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நகரங்களில், வீடுகளுக்கு இணைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயுக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. குழாயில் கசிந்த வாயு காரணமாக, பலத்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மொத்தம் 70 இடங்களில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், 6-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரு வீடு முற்றிலுமாக எரிந்து விட்டது. வீடுகளுக்குச் செல்லும் கேஸ் இணைப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பெருமளவில் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். 

போஸ்டன் நகரில் பற்றி எரியும்  வீடு

தீ விபத்தின் காரணமாக நகரமே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுகின்றனர். மேலும், மருத்துவக் குழுவினரும் விரைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

முன்னதாக, 'நகரங்களுக்குச் செல்லும் கேஸ் இணைப்பில் கசிவு ஏற்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டது' என உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர். மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்தால் ஏற்பட்ட சேதம்குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!