`கொலம்பியாவில் பிறந்த சிலந்தி குரங்கு!’ - கொண்டாடும் உயிரியல் பூங்கா

சிலந்தி குரங்கு

Photo : Tweeted by @ZooSantaFe

கொலம்பியா நாட்டின் உயிரியல் பூங்கா ஒன்றில் அழிந்துவரும் அரிய விலங்கான சிலந்தி குரங்குக்குட்டி பிறந்துள்ளது. சிலந்தி குரங்குக் குட்டியின் பிறப்பை அந்த உயிரியல் பூங்கா கொண்டாடி வருகிறது. 

கொலம்பியாவின் மேடெல்லின் (Medellin) நகரத்தில் உள்ள சான் ஃபூ விலங்கியல் பூங்காவில் (San Fe zoological park ) கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சிலந்தி குரங்குக்குட்டி பிறந்துள்ளது. உயிரியல் பூங்காவின் ஊழியர் கரோலினா டயஸ் (Carolina Diaz) கூறுகையில், ``அந்தக் குட்டி ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை. தாயையும் குட்டியையும் பிரிக்காமல் இருப்பதால் அதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை" என்றார். கறுப்பு நிற முடியுடன் பிறந்துள்ள சிலந்தி குரங்கு ஏறக்குறைய ஒரு கிலோ எடையும் 20 செ.மீ உயரமும் கொண்டிருக்கிறது. கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து இதுவரை மூன்றாவது சிலந்தி குரங்குக்குட்டி பிறந்துள்ளது. 

தற்போது சான் ஃபூ உயிரியல் பூங்காவில் 20 சிலந்தி குரங்குகள் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்ப மண்டல மலைக்காடுகள்தான் சிலந்தி குரங்குகளின் இயற்கையான வாழ்விடம். உலகிலேயே அதிகமாக அழிந்துவரும் 25 அரிய விலங்கினங்களில் ஒன்றாக உள்ளது சிலந்தி குரங்கு. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியமும் இதைக் கூறியுள்ளது. விவசாயத்துக்காகவும் தொழிற்வளர்ச்சிக்காவும் காடுகள் அழிக்கப்படுவதும் வேட்டையாடப்படுவதும் கடத்தலும் சிலந்தி குரங்குகளின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றன. அதனால் சிலந்தி குரங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியை சான் ஃபூ உயிரியல் பூங்கா செய்து வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!