`பேட்டரியில் கண்டம்’ - மீண்டும் தீப்பிடித்த சாம்சங் ஸ்மார்ட்போன்! | Galaxy Note 9 catches fire in woman’s purse

வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (17/09/2018)

கடைசி தொடர்பு:19:00 (17/09/2018)

`பேட்டரியில் கண்டம்’ - மீண்டும் தீப்பிடித்த சாம்சங் ஸ்மார்ட்போன்!

சாம்சங்

சாம்சங், சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் தீப்பிடித்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட் போன்கள் தீப்பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து, சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7-ன் விற்பனையை நிறுத்தியதோடு மட்டுமின்றி, ஏற்கெனவே விற்பனையான ஸ்மார்ட்போன்களையும் திரும்பப் பெற்றது. இந்தச் சம்பவம், சாம்சங்கிற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியது. அதன்பிறகு வெளியான கேலக்ஸி நோட் 8-ல் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. இந்நிலையில்தான், சமீபத்தில் வெளியான புதிய கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன், நியூயார்க்கில் தீப்பிடித்து எரிந்திருக்கிறது.

நோட் 9

இந்த மாதம் 3-ம் தேதி, டயான் சுங் (Diane Chung) என்ற பெண்மணி எலிவேட்டரில் சென்றுகொண்டிருக்கும்போது இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது போன் அதிகமாக சூடாவதைப் போல தோன்றவே உடனடியாக அதை கைப்பையினுள்ளே வைத்திருக்கிறார். அதன்பிறகு, உள்ளே இருந்து விநோதமான சத்தத்துடன் அடர்த்தியான புகையும் வெளிவந்திருக்கிறது. அதை வெளியே எடுக்க முயன்றபோது, அவரது கைகளிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது. அப்படியும், போனிலிருந்து புகை வெளியாவது நிற்கவேயில்லை எலிவேட்டரில் இருந்து வெளியேறி, துணியால் போனைச் சுற்றி நீரில் போட்ட பிறகே, புகை வருவது நின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் 4,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை, மிகவும் பாதுகாப்பானது என்று சாம்சங் தெரிவித்திருந்தது.