வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (20/09/2018)

கடைசி தொடர்பு:18:24 (20/09/2018)

`ட்ரம்புக்கு கொடுத்த வாக்கை நிறைவேத்த முடியல!’ - வேலைவாய்ப்பு விவகாரத்தில் கைவிரித்த ஜாக் மா

அமெரிக்காவுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார் அலிபாபா நிறுவனத்தின் தலைவர்  ஜாக் மா.

ஜாக் மா
 

அப்படியென்ன வாக்குறுதி கொடுத்தார்  ஜாக் மா? தொடர்ந்து படியுங்கள்... 

ஆன்லைன் வணிக ஜாம்பவான் ஜாக் மா சீனாவை சேர்ந்தவர். ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்னர் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பனிப்போர் சற்று தீவிரம் அடைந்துவிட்டது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜாக் மா - ட்ரம்ப் இடையிலான வரலாற்று சந்திப்பு நிகழ்ந்தது. அந்தச் சந்திப்பின்போது அமெரிக்காவில் வேலை வாய்ப்பை அதிகரிக்க, தான் உதவுவதாக ஜாக் மா தெரிவித்தார். அமெரிக்க சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களை அலிபாபா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வைப்பது குறித்து ஆலோசித்தனர். மேலும், அமெரிக்காவில் அலிபாபா நிறுவனத்தின் மூலம் 1 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக ட்ரம்புக்கு ஜாக் மா வாக்குறுதி கொடுத்தார்.

ட்ரம்ப், ஜாக் மா
 

இந்தச் சந்திப்பு நிகழ்ந்து ஓராண்டுகள் கடந்த நிலையில் இதுகுறித்து சீன ஊடகம் ஒன்று ஜாக் மாவிடம் கேள்வியெழுப்பியது. அதற்கு பதிலளித்த ஜாக் மா... `நான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைச் சந்தித்த சமயத்தில் சீனா அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் சுமுகமாக இருந்தது. எனவே அந்த சூழல் தொடரும் என்ற அடிப்படையில் வாக்குறுதி கொடுத்தேன். ஆனால், தற்போது சூழ்நிலை மாறிவிட்டது. அமெரிக்கா - சீனா இடையிலான வணிகப் போர் தீவிரமடைந்து வருகிறது. எனவே, அமெரிக்காவுக்கு கொடுத்த வாக்குறுதியை  நிறைவேற்றுவது சாத்தியம் அல்ல. ஒரு வகையில் ட்ரம்ப்பும் இதற்கு முக்கிய காரணம். சீனா மீது அவர் தொடுக்கும் வரி விதிப்பு போரால்தான் 1 மில்லியன் வேலைவாய்ப்புகளை என்னால் உருவாக்க முடியாமல் போனது’ என்றார்.

தற்போதை சூழல் குறித்து ஜாக் மா விவரித்தது பின்வருமாறு...

`சீனா - அமெரிக்கா இடையே வணிக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் போட்டிப் போட்டுக்கொண்டு இறக்குமதிப் பொருள்களுக்கு வரி விதிக்கின்றன. பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் இந்தப் போட்டி தொடர்கிறது. இன்னும் 20 ஆண்டுகள் வரை இந்தப் போர் நீடிக்கும் என்பது என் கணிப்பு. இந்தப் போக்கு மற்ற நாடுகளின் வணிகத்தையும் பாதிக்கும். சீனப் பொருளாதார வல்லுநர்களும் அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் உடனடியாக இந்தச் சூழலை சரி செய்ய வேண்டும். சுமுக தீர்வை எட்ட வேண்டும்’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க