வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (20/09/2018)

கடைசி தொடர்பு:20:40 (20/09/2018)

வில்லியம்ஸ் சகோதரிகள் போல் வேடம்! - நிறவெறி சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கால்பந்து க்ளப் வீரர்கள்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர்கள் `மேட் மன்டே' எனும் நிகழ்வைக் கொண்டாடுவது வழக்கம். அதை மது அருந்தி, விதவிதமாய் வேடமணிந்து, ரணகளமாய் கொண்டாடித் தீர்ப்பர். அப்படி, `மேட் மன்டே' கொண்டாட்டத்தில் இரு வீரர்கள் வேடங்கள் அணியப்போய், அதுபெரும் சர்ச்சை ஆகியுள்ளது.

கால்பந்து வீரர்கள்

ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா மாகாணத்தில் `பென்குயின் கால்பந்து க்ளப்' செயல்பட்டு வருகிறது. இந்தக் கால்பந்து க்ளப்பை சேர்ந்த மிட்ச் ஸ்டான்லி மற்றும் மாட் சாம்பர்லெயன் ஆகியோர்தான் இந்தச் சர்ச்சையில் சிக்கியவர்கள். டென்னிஸ் விளையாட்டுலகின் ஜாம்பவான்களான வீனஸ் மற்றும் செரினா வில்லியம்ஸின் வேடங்களை அணிகிறேன் என இருவரும் உடல் முழுக்க கறுப்பு பெயின்ட்டை பூசிக்கொண்டு, டென்னிஸ் ஸ்கர்ட், விக் எல்லாம் அணிந்திருக்கிறார்கள். அவர்களின் நண்பர் ஒருவர் அந்தப் படத்தை முகநூலில் பதிந்துவிட, பல்வேறு தரப்பிலிருந்தும் வசை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் ஸ்டான்லியும் சாம்பர்லெயனும்.

`இந்த வேடமும் புகைப்படமும் நிறவெறியை உமிழ்கின்றன, இது மிகவும் கண்டிக்கத்தக்கது' எனப் பலரும் அவர்களைத் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். `வீரர்களின் இந்தச் செயல் துளியும் ஏற்றுக்கொள்ள முடியாது’ எனக் கூறி அவர்கள் சார்பில் மன்னிப்பும் கேட்டிருக்கிறது பென்குயின் கால்பந்து க்ளப் நிர்வாகம்.