வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (20/09/2018)

கடைசி தொடர்பு:21:15 (20/09/2018)

கொசுக்களின் உணவிலும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்!

கொசு

கொசுக்களின் உணவுச் சங்கிலியிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கலந்து மாசுபடுத்தி வருகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதர்களால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்பட்ட பிறகு, பல்வேறு இடங்களில் குப்பையாகச் சேர்கின்றன. அந்தக் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட்டாலும், நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகின்றன. இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் ஆர்டிக், அன்டார்டிகா துருவப்பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகளிலும்கூட காணப்படுகின்றன. மிக முக்கியமாகக் கடல் உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய ஆபத்தாக இருக்கின்றன. அது மட்டுமில்லாமல், நம்முடைய உணவுப்பொருள்களிலும் கூட நுண்ணிய பிளாஸ்டிக்குகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், கொசுக்கள் முட்டையிடுவதும், அவை வளர்ந்து லார்வா நிலையை எட்டுவதும் தண்ணீரில்தான் நடக்கின்றன. அந்தத் தண்ணீரில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதால், கொசு லார்வாக்கள் அதையும் உண்டு வளர்கின்றன. இதன்மூலம், கொசுவை சாப்பிடக்கூடிய அடுத்தகட்ட உயிரினத்துக்கு அந்த மைக்ரோபிளாஸ்டிக் கடத்தப்படும். இதனால், உணவுச்சங்கிலி முழுக்க இவை பரவும் என்கின்றனர் ஆய்வாளர்கள். " கொசுக்களில் மட்டுமல்ல, தண்ணீரில் முட்டையிடக்கூடிய மற்ற பூச்சி வகையினங்களும் இதே நிலையில் இருக்கலாம் " என்கிறார், இந்த ஆய்வைச் செய்த ஆய்வுக்குழுவின் உயிரியலாளர் அமண்டா கலாகன் (Amanda Callaghan). மேலும், இதுகூட ஒருவகையான மாசுபாடுதான். இதனால், உயிரினங்களின் உணவுச் சங்கிலியில் மாற்றம் ஏற்படலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். பிளாஸ்டிக்குகளைக் கையாள்வதுதான் உலகம் முழுக்க இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது.