வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (21/09/2018)

கடைசி தொடர்பு:13:40 (21/09/2018)

காலக்கெடுவை நீட்டித்த அமெரிக்கா! எண்ணெய் நிறுவனங்களுக்குக் கவசமாக நிற்கிறாரா ட்ரம்ப்?

ட்ரம்ப் ஆட்சியின் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சாதகமான செயல்பாடுகளுக்கு எதிராக கலிபோர்னியாவும் நியூ மெக்ஸிகோவும் வழக்கு தொடர்ந்துள்ளன.

எண்ணெய் மற்றும் வாயுத் தொழிற்சாலைகளுக்கு ஒபாமா மூன்று அடிப்படை கட்டுப்பாட்டு நிர்ணயங்களை விதித்திருந்தார். அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது ட்ரம்ப் ஆட்சியில் நீக்கப்படுவது சூழலுக்கு மிகவும் ஆபத்தானதென்று அம்மாகாண மக்கள் நினைக்கின்றனர். கார்பன்டை ஆக்ஸைடைவிட 86 மடங்கு அதிகம் அபாயமானது மீத்தேன் என்ற பசுமை இல்ல வாயு. கிட்டத்தட்ட அது ஒரு விஷவாயு. நைட்ரஜன் ஆக்ஸைடோடு வினைபுரிந்து புகை மண்டலங்களை உருவாக்கும். அந்த வாயுப் புகை மண்டலம் மக்களுக்கு ஆபத்தானது. நில மேலாண்மை நிர்வாகம் தற்போது இத்தகைய விஷவாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடும் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

டிரம்ப்

ஒபாமா ஆட்சியின்போது அந்நிறுவனங்கள் எண்ணெய் எடுக்கும்போது வெளியாகும் மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்களையும் பிரித்தெடுக்க வேண்டுமென்றும் அவற்றை அப்படியே வளிமண்டலத்தில் வெளியேற விடக்கூடாதென்றும் கட்டுப்பாடு விதித்தார். அதற்கான முறையான தொழில்நுட்பங்களை அவர்கள் கையாள வேண்டுமென்று அறிவித்தார். ஆனால், நிறுவனங்கள் இதை முறையாகச் செய்யவில்லை. கசிவுகளாகவோ அல்லது அப்படியே முழுமையாகவோ விஷவாயுக்களைக் காற்றில் கலக்க விட்டுக்கொண்டிருந்தனர். 2009 முதல் 2015-க்குள் 426 பில்லியன் கன அடி அளவிலான வாயு வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க் கிழமை, அமெரிக்காவின் நில மேலாண்மை நிர்வாகம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. எண்ணெய் மற்றும் வாயு நிறுவனங்கள் மீத்தேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை அமைத்துக்கொள்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. ``லாபமே கொடுக்காத, பொருளாதார முக்கியத்துவமற்ற ஒரு வாயுவை ஏன் செலவுசெய்து பண்படுத்த வேண்டும்" என்று அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால் அந்த வழக்கு முடியும்வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளதாகக் காரணம் கூறுகிறார்கள்.

காலநிலை மாற்றத்தின் அபாயங்களைத் தெளிவாகக் காணும் இந்தக் காலகட்டத்தில் இத்தகைய பொறுப்புணர்வற்ற அதிகார வர்க்கத்தின் நிலைப்பாடு அபாயத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.