வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (22/09/2018)

கடைசி தொடர்பு:07:30 (22/09/2018)

``பொருளாதாரத் தடையை விலக்கிக்கொள்ளுங்கள்''- அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா!

சீனா மீது அமெரிக்கா, பொருளாதாரத் தடை விதித்துள்ளது. `அமெரிக்கா தன் தவறை திருத்திக் கொண்டு பொருளாதாரத்தடையை விலக்கி கொள்ளவேண்டும்; இல்லையென்றால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்'' என சீனா எச்சரித்துள்ளது.

சீனா எச்சரிக்கை


ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வாங்கியதன் காரணமாக சீனாவின் ராணுவ அமைப்பிற்கு நிதி பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை, அமெரிக்காவுடனான உறவில் விதி மீறும் செயல் என்று கூறி இந்த தடையை அமெரிக்கா விதித்துள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே வர்த்தகப்போர் பெரும் மோதலை எட்டியுள்ளது. அமெரிக்காவின் வரி உயர்வு காரணமாக, சீனா பாதிப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு அமைப்பின் மீதான இந்த பொருளாதாரத்தடை, சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா, ``அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, இருநாடுகள் மற்றும் ராணுவங்கள் இடையே உள்ள உறவுகளை கடுமையாக பாதிக்கசெய்யும். தவறை திருத்திக்கொண்டு, எங்கள் மீதான தடையை விலக்கிக்கொள்ளுங்கள்; இல்லையென்றால் கடுமையான விளைவை எதிர்கொள்ள நேரிடும்'' என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.